/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பயணியர் அதிகம் வருகை பஸ் சேவைகள் அதிகரிப்பு
/
பயணியர் அதிகம் வருகை பஸ் சேவைகள் அதிகரிப்பு
ADDED : மே 13, 2025 12:58 AM
பெங்களூரு : பயணியர் கூட்டம் அதிகம் உள்ள வழித்தடங்களில், கூடுதல் பஸ்களை இயக்க பி.எம்.டி.சி., திட்டமிட்டுள்ளது.
பெங்களூரில் உள்ளோர் பலரும் பி.எம்.டி.சி., பஸ்களில் பயணம் செய்வதையே வாடிக்கையாக வைத்துள்ளனர். சில குறிப்பிட்ட வழித்தடங்களில், மக்கள் அதிக எண்ணிக்கையில் பயணம் செய்கின்றனர்.
இந்த வழித்தடங்களில் பஸ்களுக்கான தேவை அதிகம் உள்ளது. பயணியர் பலரும் நீண்ட நேரம் காத்திருந்து பயணம் செய்கின்றனர். பஸ்களின் எண்ணிக்கையை அதிகப்படுத்துமாறு பயணியர் கோரிக்கை வைத்தனர்.
இதை கருத்தில் கொண்ட பி.எம்.டி.சி., நிர்வாகம், பயணியர் அதிகம் பயணம் செய்யும் வழித்தடங்களில், பஸ்களின் சேவையை அதிகரிக்கவும், புதிதாக நடத்துநர்களை பணியில் அமர்த்தவும் திட்டமிட்டுள்ளது.
பி.எம்.டி.சி., தலைமை போக்குவரத்து மேலாளர் ஜி.டி.பிரபாகர ரெட்டி கூறியதாவது:
பயணியர் அதிகம் பயணம் செய்ய கூடிய வழித்தடங்களில், பீக் ஹவர்சில் கூட்ட நெரிசல் அதிகமாக உள்ளது. இதனால் பயணியர் சிரமப்படுகின்றனர். பஸ்கள் இருந்தும், போதுமான அளவு போக்குவரத்து ஊழியர்கள் இல்லாததே காரணம்.
இதை கருத்தில் கொண்டு, புதிதாக பணியில் சேர உள்ள 2,286 நடத்துநர்களில், அதிக நெரிசல் கொண்ட 25 வழித்தடங்களில், 100 பேர் பணியமர்த்தப்படுவர். இதன் மூலம், பயணியர் அதிகம் உள்ள வழித்தடங்களில், அதிக எண்ணிக்கையில் பஸ்கள் இயக்கப்படும். வரும் நாட்களில் பயணியரின் சிரமம் கண்டிப்பாக குறையும்.
இவ்வாறு அவர் கூறினார்.