/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஐகோர்ட் கண்டிப்பால் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்... நிறுத்தி வைப்பு!; அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் பாதிப்பு குறைவு; பேருந்துகள் மீது கல் வீசியதால் பரபரப்பு
/
ஐகோர்ட் கண்டிப்பால் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்... நிறுத்தி வைப்பு!; அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் பாதிப்பு குறைவு; பேருந்துகள் மீது கல் வீசியதால் பரபரப்பு
ஐகோர்ட் கண்டிப்பால் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்... நிறுத்தி வைப்பு!; அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் பாதிப்பு குறைவு; பேருந்துகள் மீது கல் வீசியதால் பரபரப்பு
ஐகோர்ட் கண்டிப்பால் பஸ் ஊழியர்கள் ஸ்டிரைக்... நிறுத்தி வைப்பு!; அரசு எடுத்த முன்னெச்சரிக்கையால் பாதிப்பு குறைவு; பேருந்துகள் மீது கல் வீசியதால் பரபரப்பு
ADDED : ஆக 06, 2025 09:10 AM

ஊதிய உயர்வு, 38 மாதம் நிலுவையில் உள்ள ஊதியம் உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் ஆக., 5 முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்துக்கு அழைப்பு விடுத்திருந்தனர். இவர்களை சமாதானப்படுத்த, அரசு பல சுற்று பேச்சு நடத்தியது.
ஆனால், அனைத்தும் தோல்வியில் முடிந்தது. நேற்று முன்தினம் முதல்வர் சித்தராமையா, தொழிற்சங்கங்களுடன் ஆலோசனை நடத்தினார்.
14 மாத தொகை முதல்வர் சித்தராமையா, '14 மாதங்களுக்கான நிலுவை தொகை வழங்கப்படும்' என்று கூறினார். ஆனால் அவர்கள் ஏற்கவில்லை. திட்டமிட்டப்படி வேலை நிறுத்தம் நடக்கும் என்று கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பாரெட்டி அறிவித்தார்.
இதற்கிடையில், வேலை நிறுத்ததை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில், சுனில் என்பவர் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு மீதான விசாரணை நடத்திய நீதிமன்றம், போராட்டத்தை ஒரு நாள் தள்ளி வைக்க, கூட்டமைப்புக்கு உத்தரவிட்டது.
இது தொடர்பாக அனந்த சுப்பா ரெட்டியிடம் கே ட்டபோது, 'என் கைக்கு நீதிமன்ற உத்தரவு வராததால், வேலை நிறுத்தம் திட்டமிட்டபடி நடக்கும்' என்று அறிவித்தார் .
இதையடுத்து, நேற்று முன்தினம் மாலை முதலே ஹாசனில் பெரும்பாலான பஸ்கள் இயங்கவில்லை. ஆனால். கே.எஸ்.ஆர்.டி.சி., தரப்பில், '4ம் தேதி இரவு 9:00 மணி வரை, கே.எஸ்.ஆர்.டி.சி.,யின் ஹாசன் பிரிவில் மட்டுமே, சிறிய அளவு பஸ்கள் இயக்கம் பாதிக்கப்பட்டதே தவிர, மற்ற 15 பிரிவுகளில் அனைத்து பஸ்களும் இயங்கின' என குறிப்பிட்டிருந்தது.
மாணவர்கள் அவதி இந்நிலையில், நேற்று காலை முதலே மாநிலத்தின் பல மாவட்டங்களில் அரசு பஸ்கள் இயங்கவில்லை. நீதிமன்ற உத்தரவுக்கு மதிப்பு கொடுத்து, பஸ்கள் இயக்கப்படும் என்று பொது மக்கள் நம்பி, பஸ் நிலையத்துக்கு வந்தனர். ஆனால், பஸ்கள் வராததால் பள்ளி, கல்லுாரி செல்லும் மாணவ - மாணவியரும் பாதிக்கப்பட்டனர்.
ஷிவமொக்கா, கலபுரகி, விஜயநகரா, ஹொஸ்பேட், ஹூப்பள்ளி, பாகல்கோட், கொப்பால், மைசூரு உட்பட பல்வேறு மாவட்டங்களில் விரல் விட்டு எண்ணும் அளவில் மட்டுமே அரசு பஸ்கள் இயங்கின.
அதேவேளையில் சிக்கமகளூரில் 70 சதவீதத்துக்கும் மேற்பட்ட பஸ்கள் இயங்கினாலும், பயணியர் குறைவாகவே காணப்பட்டனர்.
கோலார், ஹூப்பள்ளியில் வேலை நிறுத்தத்துக்கு எதிராக பஸ்கள் இயங்கியதால், மர்ம நபர்கள் கற்களை வீசியதில், பஸ் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்தன. இது தொடர்பாக அந்தந்த பகுதி போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
கொப்பால் பல்கலைக் கழக மாணவர்களுக்கு நேற்று தேர்வு இருந்தது. போக்குவரத்து ஊழியர்களின் போராட்டத்தால், தேர்வு தள்ளி வைக்கப்பட்டதாக, பல்கலைக்கழகம் அறிவித்தது.
ஐகோர்ட் அதிரடி இந்நிலையில், கர்நாடக உயர் நீதிமன்றத்தில், வேலை நிறுத்தம் தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி ஜோஷி அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது நடந்த விவாதம்:
ஆட்வகேட் ஜெனரல் சசிகரண் ஷெட்டி: கர்நாடகாவில் நான்கு போக்குவரத்து கழகங்கள் உள்ளன. மூன்று கழகங்களின் ஊழியர்கள் மட்டுமே வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். பெரும்பாலான ஊழியர்கள் வராததால், 30 முதல் 40 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கின.
போக்குவரத்து தொழிற்சங்கங்களின் கூட்டமைப்புடன், முதல்வர் சித்தராமையா நடத்திய பேச்சு தோல்வி அடைந்ததால், அடுத்த கூட்டம், வரும் 7ம் தேதி நடக்கிறது.
தொழிற்சங்களின் சார்பு வக்கீல்கள்: பெங்களூரில் 90 சதவீத பி.எம்.டி.சி., பஸ்கள் இயங்கி வருகின்றன. பேச்சுவார்த்தை நடந்து வருவதால், எங்கள் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம்.
நீதிபதிகள்: மாநில அரசு, ஜூலை 17ல் எஸ்மா சட்டம் அமல்படுத்தி இருந்தும், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டது சட்ட விரோதம். எனவே, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுப்பது தவிர்க்க முடியாது.
வேலை நிறுத்தம் நாளை (இன்று) நிறுத்தப்பட வேண்டும். இல்லை என்றால், எஸ்மா சட்டத்தின் கீழ், இவர்களை கைது செய்ய போலீசாருக்கு அதிகாரம் உள்ளது.
உங்களின் கோரிக்கைகள் குறித்து அரசிடம் பேச்சு நடத்துங்கள். அதை விடுத்து பொது மக்களுக்கு இதுபோன்ற தொல்லைகள் கொடுக்க கூடாது. உங்களின் கோரிக்கைக்காக, பொது மக்களை வஞ்சிக்க கூடாது. ஆனாலும், இதை தொழிற்சங்கத்தினர் செய்கின்றனர்.
நேற்றைய (முன்தினம்) வேலை நிறுத்தத்துக்கு விதிக்கப்பட்ட இடைக்கால தடை, அடுத்த விசாரணை வரும் 7ம் தேதி வரை அமலில் இருக்கும்.
இவ்வாறு நீதிபதிகள் கூறினர்.
நீதிமன்றத்தின் கடுமையான உத்தரவால், தொழிற்சங்கத்தினர் அதிர்ச்சி அடைந்தனர். இதையடுத்து, கூட்டமைப்பு தலைவர் அனந்த சுப்பா ரெட்டி அளித்த பேட்டி:
பல டிப்போக்களில் நேற்று (முன்தினம்) வேலை நிறுத்தம் துவங்கிவிட்டது. அந்தந்த மாவட்டங்களில் இருந்து புறப்பட்டு, வேறு மாவட்டங்களுக்கு செல்லும் பஸ்கள் புறப்படவில்லை.
நேற்று (முன்தினம்) இரவு 7:15 மணியளவில் வக்கீல், நீதிமன்ற உத்தரவை சமர்ப்பித்து, வேலை நிறுத்தத்தை ஒரு நாள் தள்ளி வைக்கும்படி உத்தரவிட்டதாக தெரிவித்தார்.
எங்கள் கூட்டமைப்பின் ஆறு சங்கங்கள் உள்ளன. அதன் பிரதிநிதிகள் புறப்பட்டு சென்றுவிட்டனர். இரவு எங்கள் வக்கீல்களை அனுப்பி, 'வக்காலத்து' பதிவு செய்தனர்.
எங்களுக்கு இரவில் தான் நீதிமன்ற உத்தரவு கிடைத்தது. அதற்குள் போராட்டம் துவங்கிவிட்டது. நீதிமன்ற உத்தரவு கிடைத்த பின், எங்கும் வேலை நிறுத்த நோட்டீஸ் ஒட்டவில்லை; பஸ்களை தடுத்து நிறுத்தவில்லை.
தற்போது நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து உள்ளது. இந்த உத்தரவை ஏற்கிறோம். எனவே, இந்த வாய்ப்பை பயன்படுத்தி, எங்களுடன் அரசு மீண்டும் பேச்சு நடத்த வேண்டும். ஊழியர்கள் மீது எஸ்மா சட்டத்தை அமல்படுத்த வேண்டாம் என்று கேட்டு கொள்கிறோம். நாங்கள் போராட்டத்தை வாபஸ் பெறவில்லை. நீதிமன்றத்தின் உத்தரவின்படி, தற்காலிகமாக நிறுத்தி உள்ளோம்.
ஊழியர்கள் யாருடன் இருக்கின்றனர் என்ற தகவல் நிமிடத்துக்கு நிமிடம், முதல்வருக்கு செல்கிறது. எங்களின் கோரிக்கையில் உறுதியாக இருக்கிறோம். கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்று முதல்வரிடம் கேட்டு கொள்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை பஸ் டிப்போவில் 150க்கும் மேற்பட்ட அரசு பஸ்கள் இயங்குகின்றன. ராபர்ட்சன் பேட்டை பஸ் டிப்போ, புதிய, பழைய பஸ் நிலையம் உட்பட பல்வேறு இடங்களில் அதிகாலை முதலே போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். போலீஸ் எஸ்.பி. ஷிவன்ஷு ராஜ்புத் ரோந்து சென்றார்.
தனியார் பஸ்கள், தமிழக, ஆந்திர மாநில பஸ்கள் வழக்கம் போல இயங்கின. கர்நாடக மாநில அரசு போக்குவரத்து கழக பஸ்கள், மாலை 5:00 மணிக்கு மேல் தான் இயங்க துவங்கின.