விஜயபுராவில் டீசல் பற்றாக்குறை டிப்போக்களில் நிற்கும் பஸ்கள்
விஜயபுராவில் டீசல் பற்றாக்குறை டிப்போக்களில் நிற்கும் பஸ்கள்
UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 07:54 PM
விஜயபுரா: கொப்பாலை தொடர்ந்து விஜயபுராவிலும், கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால், ஏராளமான அரசு பஸ்கள், டிப்போவில் வரிசையாக நிறுத்தப்பட்டுள்ளன.
கொப்பால் மாவட்டம், குஷ்டகியில் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களுக்கு டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. இதனால், பல வழித்தடங்களில் பஸ் போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள், வியாபாரிகள் என பலரும் பாதிப்படைந்துள்ளனர்.
தற்போது, விஜயபுராவிலும் இது போன்ற சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
விஜயபுரா நகரம் மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள கிராமங்களுக்கு செல்லும் கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்களுக்கு டீசல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
எனவே, கடந்த மூன்று நாட்களாக கே.எஸ்.ஆர்.டி.சி., பஸ்கள், டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. கிராமங்களில் இருந்து தினமும் காலை பள்ளி, கல்லுாரிக்கு செல்லும் மாணவர்கள், பணிக்கு செல்லும் ஊழியர்கள், தங்கள் போக்குவரத்துக்கு அரசு பஸ்களையே நம்பியுள்ளனர்.
தற்போது பஸ்கள் இல்லாமல் அவதிப்படுகின்றனர்.
இது குறித்து தகவலறிந்த மாநில பா.ஜ., தலைவர் விஜயேந்திரா, முன்னாள் எம்.எல்.சி., அருண் ஷஹாபுரா உட்பட பா.ஜ., தலைவர்கள் பலரும், நேற்று காலை விஜயபுராவின் கேங்பாவடியில் உள்ள டிப்போவுக்கு சென்று, ஆய்வு செய்தனர்.
பின், விஜயேந்திரா அளித்த பேட்டி:
மாநில அரசு முற்றிலும் திவாலாகி விட்டது. சக்தி திட்டத்தின் கீழ், மாநில அரசிடம் இருந்து போக்குவரத்து கழகங்களுக்கு, 6,500 கோடி ரூபாய் பாக்கி வர வேண்டியுள்ளது. அரசின் அலட்சியத்தால், பஸ்கள் இயங்காமல், டிப்போக்களில் நிறுத்தப்பட்டுள்ளன. இதனால், பயணியர் பாதிப்படைந்துள்ளனர்.
கொப்பால், விஜயபுராவில் மட்டுமின்றி பெங்களூரின் பி.எம்.டி.சி., பஸ்களுக்கும் டீசல் தட்டுப்பாடு பிரச்னை உள்ளது.
பெங்களூரின் 40 லட்சத்துக்கும் அதிகமான மக்கள், பி.எம்.டி.சி.,யை நம்பியுள்ளனர். டீசல் சப்ளை செய்யும் பெட்ரோலிய நிறுவனங்களுக்கு, நான்கைந்து மாதங்களாக பி.எம்.டி.சி., டீசல் பணம் பாக்கி வைத்துள்ளது.
விரைவில் இந்த தொகையை வழங்காவிட்டால் டீசல் சப்ளையை நிறுத்துவதாக நிறுவனங்கள் கூறியுள்ளன.
இதே நிலை நீடித்தால் பெங்களூரில் டீசல் இல்லாமல் பி.எம்.டி.சி., பஸ்களும் டிப்போக்களில் நிற்கும். பயணியர் அவதிப்படும் சூழ்நிலை ஏற்படலாம்.
இவ்வாறு அவர் கூறினார்.
