UPDATED : அக் 10, 2026 12:00 AM
ADDED : அக் 09, 2026 07:54 PM
குடகு: விராஜ்பேட் தாலுகாவின் பட்டதள ஹேரூர் எஸ்டேட் அருகில், புலி நடமாடுவதால் கவனமாக இருக்கும்படி, வனத்துறை எச்சரித்துள்ளது.
குடகு மாவட்டம், விராஜ்பேட் தாலுகாவின் பட்டதள ஹேரூர் எஸ்டேட் அருகில், சாலை ஓரத்தில், நேற்று அதிகாலை புலி தென்பட்டது. சிறிது நேரம் நின்றிருந்த புலி, எஸ்டேட்டுக்குள் சென்று விட்டது. அந்த வழியாக வாகனத்தில் சென்ற பயணியர், தங்கள் மொபைல் போனில் புலியை பதிவு செய்து, சமூக வலைதளங்களில் வெளியிட்டனர்.
இதை பார்த்த வனத்துறை அதிகாரிகள், அங்கு சென்று பார்த்த போது, புலியின் கால் தடங்கள் இருந்தன. இதை பிடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். வாகனங்களில் ரோந்து சுற்றி எச்சரிக்கை விடுத்தனர்.
‘சாலையோரம், காபி தோட்டத்தின் நடுவே புலி நடமாட்டம் இருப்பதால், சுற்றுப்புற கிராமத்தினர் எச்சரிக்கையாக இருக்க வேண்டும். காபி தோட்டத்துக்கு செல்லும் தொழிலாளர்கள், தனியாக செல்லாதீர்கள். இரவு நேரத்தில் தேவையின்றி வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்.
‘வளர்ப்பு பிராணிகளை கவனமாக பார்த்து கொள்ளுங்கள். சிறு குழந்தைகளை வெளியே விளையாட விட வேண்டாம். புலி தென்பட்டால் அதன் அருகில் செல்வதோ, போட்டோ, வீடியோ எடுப்பதோ கூடாது. உடனடியாக வனத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும்’ என உத்தரவிட்டுள்ளனர்.
