ADDED : செப் 17, 2026 11:16 PM
மங்களூரு: கடலோர மாவட்டத்தில், முதன் முறையாக, கர்நாடக அமைச்சரவை கூட்டம், மங்களூரில் இன்று நடக்கவுள்ளது.
தட்சிண கன்னடா மாவட்டம், மங்களூரில் மாவட்ட கலெக்டர் அலுவலகமான, பிரஜா சவுதாவில் முதல்வர் சிவகுமார் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடக்கிறது. காலை 10:00 மணிக்கு அமைச்சரவை கூட்டம் துவங்குகிறது. இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும், தட்சிண கன்னட மாவட்ட நிர்வாகம் செய்துள்ளது.
இதில் பங்கேற்பதற்காக, முதல்வர் சிவகுமாரும், அமைச்சர்களும் நேற்று மாலையே மங்களூரு சென்றுள்ளனர். அமைச்சரவை கூட்டம் நடக்கவுள்ள, பிரஜா சவுதா சிறப்பாக அலங்கரிக்கப்பட்டுள்ளது. கடலோர பகுதியின் சுற்றுலாத்துறை, மீன் வளம், சாலைகள் மேம்பாடு, குடிநீர் உட்பட, அடிப்படை வசதிகள் குறித்து ஆலோசனை நடத்தப்படும்.
பெங்களூருக்கு வெளியே, அமைச்சரவை கூட்டம் நடப்பது, இது முதன் முறையல்ல. ஜே.ஹெச்.படேல் முதல்வராக இருந்த போது, பெங்களூருக்கு வெளியே அமைச்சரவை கூட்டம் நடத்தியுள்ளார்.
