காட்டு யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
காட்டு யானை தொல்லைக்கு நிரந்தர தீர்வு காண வலியுறுத்தல்
ADDED : நவ 28, 2026 02:17 AM
சிக்கமகளூரு: ‘‘காட்டு யானைகளின் தொல்லைக்கு, நிரந்தர தீர்வு காண வேண்டும்,’’ என, பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேஷ்குமார் வலியுறுத்தினார்.
சிக்கமகளூரு மாவட்டம் மூடிகெரே தாலுகாவின் கொட்டிகேஹாராவில் இருந்து முன்டாஜே வரை சுரேஷ்குமார், நேற்று பாதயாத்திரை நடத்தினார். அவருடன் பா.ஜ., தொண்டர்களும் இருந்தனர்.
முன்டாஜேவில் நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்பதுடன், கார்கில் போரில் வீர மரணம் அடைந்த ராணுவ வீரர்களை நினைவு கூரும் வகையில், அமைக்கப்பட்ட பூங்காவை பார்க்கும் நோக்கில், சுரேஷ்குமார் பாதயாத்திரை நடத்தினார்.
அவர் அளித்த பேட்டி;
மலைப்பகுதிகளில் காட்டு யானைகளின் தொல்லை நாளுக்கு நாள் அதிகரிக்கிறது. யானைகளால் கிராமத்தினரும், விவசாயிகளும் பல கஷ்டங்களை அனுபவிக்கின்றனர்.
மக்களின் வாழ்க்கைக்கு பாதிப்பில்லாமல் யானைகள் நடமாட வழி ஏற்படுத்த வேண்டும். யானைகள் வழித்தடம் அமைத்தால், யானைகள் வனத்தில் இருந்து ஊருக்குள் வருவதை தவிர்க்கலாம்.
யானைகளின் தொல்லைக்கு தீர்வு காண்பது குறித்து, ஏற்கனவே விதான்சவுதாவில் சபாநாயகர் அறையில், வனத்துறை அமைச்சர் ராமலிங்கரெட்டி, வனத்துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினேன். பெலகாவி கூட்டத்தொடரிலும் இதுபற்றி பேசுவேன்.
யானைகளும் வாழ வேண்டும்; மக்களும் வாழ வேண்டும். இருவரின் வாழ்க்கையும் பாதிக்காமல், நடவடிக்கை எடுப்பது அவசியம். வன விலங்குகள், மனிதர்களின் மோதலை தடுக்க நிரந்தர தீர்வு காண வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
