நடிகர் ரன்வீர் சிங் மீதான வழக்கு: வக்கீலுக்கு வகுப்பெடுத்த நீதிபதி
நடிகர் ரன்வீர் சிங் மீதான வழக்கு: வக்கீலுக்கு வகுப்பெடுத்த நீதிபதி
ADDED : பிப் 24, 2026 06:18 AM

பெங்களூரு: 'பாலிவுட் நடிகர் என்றால், வழக்கை முதலில் விசாரிக்க வேண்டுமா' என்று கர்நாடக உயர் நீதிமன்ற நீதிபதி அதிருப்தி தெரிவித்தார்.
நடிகர் ரிஷப் ெஷட்டி நடித்து, இயக்கிய காந்தாரா சாப்டர் 1 திரைப்படம், உலகளவில் பெரும் வரவேற்பை பெற்றது. கோவாவில் நடந்த சர்வதேச திரைப்பட விழாவில், பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங், காந்தாரா திரைப்படத்தின் கதாபாத்திரம் குறித்து விமர்சிக்கும் வகையில் நடித்து காண்பித்தார்.
இதற்கு கர்நாடகாவில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, நடிகரும் மன்னிப்பு கேட்டுக் கொண்டார். ஆனாலும், பெங்களூரை சேர்ந்த வக்கீல் பிரசாந்த் என்பவர், ரன்வீர் சிங் மீது ஹைகிரவுண்ட் போலீசில் புகார் செய்தார். வழக்கும் தொடர்ந்தார். விசாரணைக்கு ஆஜராகும்படி, நடிகர் ரன்வீர் சிங்கிற்கு இரண்டு முறை போலீசார் நோட்டீஸ் அனுப்பியும் அவர் ஆஜராகவில்லை.
நேற்று உயர் நீதிமன்றம் கூடியதும், ரன்வீர் சிங் தரப்பு வக்கீல், 'போலீசார் ஏற்கனவே இரண்டு முறை நோட்டீஸ் அனுப்பி உள்ளனர். எனவே, இன்றே விசாரிக்க வேண்டும்' என்று கேட்டுக் கொண்டார். அதிருப்தி அடைந்த நீதிபதி நாகபிரசன்னா, ''பாலிவுட் நடிகர் என்றால் மதியமும்; ஹாலிவுட் நடிகர் என்றால் உடனேயும் விசாரிக்க வேண்டுமா?' என்று கேள்வி எழுப்பியதுடன், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தார்.
