UPDATED : நவ 23, 2026 12:00 AM
ADDED : நவ 22, 2026 09:12 PM

பெங்களூரு: சிருங்கேரி தொகுதியில் நடந்த, 2023 சட்டசபை தேர்தலில், பா.ஜ.,வின் ஜீவராஜ், ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டில் முறைகேடு நடந்துள்ளதாக, உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
இம்மனுவை விசாரித்த நீதிமன்றம், தபால் ஓட்டுகளை மறு எண்ணிக்கை நடத்த 2026 ஏப்., 6ல் உத்தரவிட்டது. மே 3ல் தபால் ஓட்டு மறு எண்ணிக்கை நடத்தப்பட்டது. அன்று நடந்த ஓட்டு எண்ணிக்கையில், ஜீவராஜ் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டார்.
மறு ஓட்டு எண்ணிக்கையின் போது, தபால் ஓட்டுகள் இருந்த பெட்டி சேதம் அடைந்திருந்தது. எனவே முறைகேடு நடந்துள்ளது என்று காங்கிரசின் சுதிர்குமார் முரோலி, சிக்கமகளூரு நகர போலீசில், ஜீவராஜ் உட்பட சிலர் மீது புகார் அளித்திருந்தார். அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது.
இதை எதிர்த்து, கர்நாடக உயர் நீதிமன்றத்தில் பா.ஜ.,வின் ஜீவராஜ் மற்றும் சிலர், மனு தாக்கல் செய்திருந்தனர். இம்மனு நீதிபதி நாகபிரசன்னா முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஜீவராஜ் தரப்பு வக்கீல், 'தேர்தல் ஓட்டுகள் எண்ணுவது தொடர்பான பிரச்னை, தேர்தல் தகராறு மனு மீதான விசாரணையின் போதே, நீதிமன்றத்தால் ஆராயப்பட்டு விட்டது. நீதிமன்ற உத்தரவுபடி, மறு ஓட்டு எண்ணிக்கையும் முடிக்கப்பட்டு விட்டது. இச்சூழ்நிலையில், மீண்டும் ஒரு குற்றவியல் வழக்கை தாக்கல் செய்வது சட்ட நடைமுறையை தவறாக பயன்படுத்துவதாகும்.
'குறிப்பட்ட காரணங்கள் எதுவுமில்லாமல், இவ்வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. எனவே, ஜீவராஜ் மீது தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்ய வேண்டும்' என்றார். இதை அரசு தரப்பு வக்கீல் ஆட்சேபித்தார்.
இரு தரப்பு வாதங்களை கேட்ட பின் நீதிபதி, ''ஜீவராஜ் மீது பதிவு செய்யப்பட்ட வழக்கு ரத்து செய்யப்படுகிறது,'' என, உத்தரவிட்டார்.
