மளிகை கடைக்காரர் தற்கொலை எம்.எல்.ஏ., சுரேஷ் மீது வழக்கு
மளிகை கடைக்காரர் தற்கொலை எம்.எல்.ஏ., சுரேஷ் மீது வழக்கு
UPDATED : அக் 15, 2026 12:00 AM
ADDED : அக் 14, 2026 10:36 PM
ஹாசன்: நகராட்சி ஊழியர்கள் தொல்லை காரணமாக, மளிகை கடைக்காரர் துாக்கிட்டு தற்கொலை செய்த வழக்கில், பேலுார் பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது வழக்குப்பதிவாகி உள்ளது.
ஹாசன் பேலுாரை சேர்ந்தவர் உமா. இவர், பேலுார் நகராட்சிக்கு சொந்தமான ஒரு கடையை ஏலத்தில் எடுத்து அங்கு மளிகை கடை நடத்தினார்.
அந்த கடையை, தன் உறவினர் நாகேஷ், 57, என்பவரிடம் ஒப்படைத்து விட்டு, சில மாதங்களுக்கு முன், பெங்களூரில் குடியேறி விட்டார். மளிகை கடைக்கு 10 லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை நாகேஷ் வாங்கியிருந்தார்.
இந்நிலையில், நகராட்சிக்கு சொந்தமான கடைகளை, கடந்த ஜூன் மாதம், அதிகாரிகள் பொது ஏலத்திற்கு விட்டனர். இதை எதிர்த்து நாகேஷ் உள்ளிட்ட வியாபாரிகள், உயர் நீதிமன்றத்தை அணுகினர்.
மறுஉத்தரவு வரும் வரை, கடைகளை காலி செய்ய, உயர் நீதிமன்றம் தடை விதித்து இருந்தது. ஆனாலும் கடந்த ஜூலை மாதம் 20ம் தேதி, நாகேஷ் நடத்திய மளிகை கடைக்கு மட்டும், நகரசபை அதிகாரிகள் பூட்டு போட்டனர்.
கடையை திறக்க சாவி கொடுக்கும்படி பல முறை நாகேஷ் கோரிக்கை விடுத்த போதிலும், அதிகாரிகள் சாவியை கொடுக்கவில்லை. ஒரு லட்சம் ரூபாய் கேட்டதுடன், பேலுார் பா.ஜ., – எம்.எல்.ஏ., சுரேஷை சந்திக்கவும் வற்புறுத்தினர்.
இதனால் மனஉளைச்சலுக்கு ஆளான நாகேஷ், கடந்த மாதம் 12ம் தேதி அவரது வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
கடையை திரும்ப கொடுக்கும் விஷயத்தில், எம்.எல்.ஏ., சுரேஷ், 55, ஒரு தலைப்பட்சமாக அரசியல் செய்ததாகவும், கடிதத்தில் குறிப்பிட்டு இருந்தார்.
இதையடுத்து சுரேஷ், நகராட்சி அதிகாரிகள் ஐந்து பேர் மீது, நாகேஷ் மனைவி நளினாக் ஷி கடந்த மாதமே புகார் செய்தார். அந்த புகாரின் உண்மையை பரிசீலனை செய்த போலீசார், சுரேஷ் உட்பட ஆறு பேர் மீது நேற்று வழக்குப்பதிவு செய்தனர்.
