வாடகைதாரர்களுக்கு கத்தி குத்து வீட்டு உரிமையாளர் மீது வழக்கு
வாடகைதாரர்களுக்கு கத்தி குத்து வீட்டு உரிமையாளர் மீது வழக்கு
ADDED : மார் 31, 2026 04:18 AM
ஜீவன்பீமாநகர்: வாடகை பண விவகாரத்தில், வாடகைதாரர்கள் மூன்று பேரை கத்தியால் குத்திய, வீட்டின் உரிமையாளர் மற்றும் அவரது மனைவி மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு ஜீவன்பீமாநகரில் கோடிஹள்ளியில் வசிப்பவர் தேவராஜ். இவருக்கு சொந்தமான வீட்டில் வடமாநிலத்தை சேர்ந்த நரேஷ், தன் சகோதரர் சச்சின், சகோதரி ரேகாவுடன் கடந்த வாரம் வாடகைக்கு குடியேறினார்.
நேற்று முன்தினம் இரவு நரேஷ் வீட்டிற்கு சென்ற தேவராஜும், அவரது மனைவி ஷோபாவும், காஸ் சிலிண்டர் விலை ஏறிவிட்டது. அதனால், அதிக வாடகை கொடுங்கள் என, நரேஷிடம் கேட்டுள்ளனர்.
நாங்கள் ஒரு வாரத்திற்கு முன்னர் தானே வந்து உள்ளோம்.
திடீரென வாடகையை அதிகரித்தால் என்ன செய்வது என, நரேஷ், சச்சின், ரேகா கேள்வி எழுப்பினர். வாடகை அதிகம் கொடுத்தால் இங்கு இருங்கள், இல்லாவிட்டால் காலி செய்து விடுங்கள் என்று தம்பதி கூறியுள்ளனர்.
இதனால், இருதரப்புக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டு உள்ளது. கோபம் அடைந்த தேவராஜும், ஷோபாவும், நரேஷ், சச்சின், ரேகாவை கத்தியால் குத்தி காயப்படுத்தி விட்டு தப்பினர். மூன்று பேரையும் அக்கம்பக்கத்தினர் மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். நரேஷ் அளித்த புகாரில் தம்பதி மீது ஜீவன்பீமாநகர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். விசாரணை நடக்கிறது.
