குப்பை டெண்டர் அளிக்க லஞ்சம் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
குப்பை டெண்டர் அளிக்க லஞ்சம் அதிகாரிகளுக்கு எதிராக வழக்கு
ADDED : ஏப் 24, 2026 04:07 AM
பெங்களூரு: ஜி.பி.ஏ., எனப்படும், கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில், திடக்கழிவுகள் மேலாண்மை டெண்டர் வழங்க, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள் லஞ்சம் கேட்டது தொடர்பாக உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
ஜி.பி.ஏ., என்ற, கிரேட்டர் பெங்களூரு ஆணையத்தில், திடக்கழிவு மேலாண்மை தொடர்பான டெண்டர் வழங்க, அதிகாரிகள் லஞ்சம் கேட்பதாக குற்றம்சாட்டி, ஒப்பந்ததாரர் பாலசுப்ரமணியன் என்பவர், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.
மனுவில், 'சி.வி.ராமன்நகர் பேக்கேஜ் - 1ன் டெண்டரில் பங்கேற்றிருந்தேன். மொத்த ஒப்பந்த தொகையில், 15 சதவீத தொகையை லஞ்சமாக கொடுக்க வேண்டும்' என, ஜி.பி.ஏ., நிர்வாக அதிகாரி துஷார் கிரிநாத்தும், அதிகாரி கரிகவுடாவும் கேட்டனர். பணம் கொடுக்காவிட்டால் டெண்டரை ரத்து செய்வதாகவும் மிரட்டினர். நான் லஞ்சம் கொடுக்க சம்மதிக்காததால், மார்ச், 26ல் டெண்டர் ரத்து செய்யப்பட்ட' என்று தெரிவித்திருந்தார்.
மனு நேற்று விசாரணைக்கு வந்த போது, அரசு தரப்பில் வாதிட்ட அட்வகேட் ஜெனரல் சசிகிரண் ஷெட்டி, ''மார்ச், 10ம் தேதி அதிகாரிகள் லஞ்சம் கேட்டதாக மனுதாரர் கூறுகிறார். அதிகாரிகள் அன்றைய தினம் பெங்களூரிலேயே இல்லை; டில்லியில் இருந்தனர். இதை உறுதிப்படுத்தும் வகையில், விமான பயணத்தின் போர்டிங் பாஸ் உள்ளது. உயர் அதிகாரிகள் மீது பொய்யான குற்றச்சாட்டுகளை சுமத்தும் மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும்,'' என்று வாதிட்டார்.
மனுதாரர் தரப்பில் வாதிட்ட வக்கீல், 'எந்த விதமான விசாரணைக்கும் தயாராக இருப்பதாகவும், லஞ்சம் கேட்டது பற்றி பிரமாண பத்திரம் தாக்கல் செய்கிறேன்' என்றார். வாத, பிரதிவாதங்களை கேட்டறிந்த நீதிமன்றம், விசாரணையை இன்றைக்கு ஒத்திவைத்தது.
