'வந்தே மாதரம்' பாடல் விவகாரம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு
'வந்தே மாதரம்' பாடல் விவகாரம் மத்திய அரசுக்கு எதிராக வழக்கு
ADDED : மார் 28, 2026 04:23 AM
பெங்களூரு: 'பள்ளிகளில், 'வந்தே மாதரம்' பாடலின் ஆறு சரணங்களையும் கட்டாயமாக பாட வேண்டும் என்ற, மத்திய அரசின் வழிகாட்டுதல், அரசியலமைப்புக்கு விரோதமானது' என, அறிவிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட பொதுநல மனு மீதான விசாரணையை, ஏப்ரல், 9ம் தேதிக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் தள்ளிவைத்துள்ளது.
கர்நாடக உயர் நீதிமன்றத்தில், பெங்களூரை சேர்ந்த வக்கீல் சோமசேகர் ராஜவன்ஷி தாக்கல் செய்த பொதுநல மனு:
பள்ளிகள் துவங்குவதற்கு முன், வந்தே மாதரம் பாடலை கட்டாயமாக பாட வேண்டும் என்பது தொடர்பாக, 'இந்திய தேசிய கீதம் தொடர்பான உத்தரவுகள்' என்ற தலைப்பில், மத்திய உள்துறை அமைச்சகம், தன் அதிகாரபூர்வ இணையதளத்தில் பதிவிட்டிருந்தது.
இந்த உத்தரவுப்படி, அனைத்து பள்ளிகளிலும் வகுப்புகள் துவங்குவதற்கு முன், தினமும் வந்தே மாதரம் பாடலின் ஆறு சரணங்கள் கொண்ட அதிகாரபூர்வ பதிவை, அனைவரும் பாட வேண்டும் என, குறிப்பிடப்பட்டு உள்ளது.
இப்பாடலில் மொத்தம் உள்ள ஆறு சரணங்களில், இரண்டு சரணங்களை மட்டும் பாட வேண்டும் என, அரசியலமைப்பு வரைவு குழு முடிவு செய்திருந்தது. இருப்பினும், உள்துறை அமைச்சகம் பிறப்பித்த உத்தரவில், ஆறு சரணங்களையும் கட்டாயமாக பாட வேண்டும் என, குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பாடலின் மூன்றில் இருந்து ஆறாவது சரணம் வரை, துர்கா, கமலா (லட்சுமி), வாணி (சரஸ்வதி) ஆகிய ஹிந்து தெய்வங்கள் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இது தொடர்பாக வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களில், அரசு மற்றும் உதவி பெறும் பள்ளிகளின் குழந்தைகள், தினமும் பாடலை பாட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளது. இது அரசியலமைப்பின் 25 (மனசாட்சிக்கான உரிமை), 28 (கல்வி நிறுவனங்களில் மத போதனைகளுக்கு தடை), 14 (சமத்துவம்) ஆகிய பிரிவுகளுக்கு முரணானது.
விரோதமானதாக... வந்தே மாதரம் அதிகாரபூர்வ பதிப்பின் மூன்று முதல் ஆறு சரணங்கள், அரசியலமைப்புக்கு விரோதமானது என்று அறிவிக்க வேண்டும்.
பள்ளிகளில் தினமும் வந்தே மாதரம் பாடுவதை கட்டாயமாக்கி, அரசு வெளியிட்டுள்ள நன்னடத்தை வழிகாட்டுதல்களை திருத்தி அமைக்கும்படி, மத்திய உள்துறை அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.
எந்த ஒரு மத அடையாளங்களும் இல்லாத வந்தே மாதரத்தின் முதல் இரண்டு சரணங்களை மட்டுமே, பள்ளிகளில் பாடுவதற்கு வரம்பு நிர்ணயித்து, அந்த பாடல் பாடப்படுவதை உறுதி செய்யும்படி, மாநில பொது கல்வித்துறை, கேந்திரிய வித்யாலயா சங்கத்திற்கு உத்தரவிட வேண்டும்.
மத்திய உள்துறை அமைச்சகத்தின் உத்தரவு, சிறுபான்மை மத குழந்தைகள், கடவுள் நம்பிக்கை இல்லாத குடும்பத்தினர் மீது தாக்கத்தை ஏற்படுத்துவதை புரிந்து கொள்ள, சிறுபான்மையினருக்கான தேசிய ஆணையம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்புக்கான தேசிய ஆணையம் ஆகியவை, மறு ஆய்வு நடத்தி அறிக்கை சமர்ப்பிக்கும்படி அறிவுறுத்த வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.
இம்மனு, தலைமை நீதிபதி விபு பக்ரு, நீதிபதி பூனாச்சா ஆகியோர் அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
தள்ளுபடி அப்போது நடந்த விவாதம்:
மத்திய அரசு தரப்பு வக்கீல் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அரவிந்த் காமத்: இதுபோன்ற ஒரு மனு, உச்ச நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவை, உச்சநீதிமன்றம் மார்ச், 25ல் தள்ளுபடி செய்தது.
நீதிபதிகள்: உச்ச நீதிமன்ற உத்தரவின் நகல் உங்களிடம் உள்ளதா?
வக்கீல்: அந்த உத்தரவு நகல் இன்னும் வெளியிடப்படவில்லை. இம்மனு மீதான விசாரணை ஒத்தி வைக்கப்பட்டால், உத்தரவின் நகல் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்.
இதையடுத்து விசாரணையை, ஏப்., 9 க்கு தள்ளிவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
