சிறைத்துறை இடம் அபகரிப்பு இரண்டு நபர்கள் மீது வழக்கு
சிறைத்துறை இடம் அபகரிப்பு இரண்டு நபர்கள் மீது வழக்கு
ADDED : மே 30, 2026 02:29 AM

பெங்களூரு: சிறைத்துறைக்கு சொந்தமான, கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள நிலத்தை, ஆக்கிரமித்த இரண்டு தனி நபர்கள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரின் காந்தி நகர் இரண்டாவது குறுக்கு சாலையில், 'மைசூரு டிஸ்சார்ஜ்டு பிரிசனர்ஸ் எய்டு சொசைட்டி' கட்டடம் உள்ளது. இது, கர்நாடக சிறைத்துறைக்கு சொந்தமானதாகும்.
மைசூரு மஹாராஜா, சிறைத்துறைக்கு 10,000 சதுர அடி நிலத்தை, தானமாக வழங்கியிருந்தார். இந்த இடத்தில் சொசைட்டி செயல்படுகிறது. இன்றைய மார்க்கெட் நிலவரப்படி, அந்த இடத்தின் மதிப்பு, 50 கோடி ரூபாயாகும்.
கடந்த ஓராண்டாக இந்த இடத்தை, அனில் என்ற வக்கீலும், கலீம் என்பவரும் அபகரித்து, தங்களின் சொந்த நோக்கத்துக்கு அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர்.
கட்டடத்தின் முதல் மாடியை அனில் தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். கீழ் தளத்தில் கலீம், பழைய பொருட்களை சேகரித்து வைத்துள்ளார். இருவரும் தங்களின் சொந்த நிலம் போல பயன்படுத்துகின்றனர்.
இதற்கிடையே, சிறையில் கைதிகள் தயாரிக்கும், பேக்கரி தின்பண்டங்கள் விற்பனை கடை, ஆயத்த ஆடைகள் விற்பனை கடை திறக்க, அதிகாரிகள் திட்டமிட்டிருந்தனர்.
காந்திநகரின் இரண்டாவது குறுக்கு சாலையில் உள்ள கட்டடத்தில், கடைகள் திறக்க தயாராகினர். கட்டடம் மிகவும் பழையது என்பதால், அதை இடித்து விட்டு, புதிய கட்டடம் கட்ட திட்டமிட்டுள்ளனர்.
சிறைத்துறைக்கு சொந்தமான கட்டடத்தை, தனியார் நபர்கள் ஆக்கிரமித்து பயன்படுத்துவதை கவனித்த, சமூக ஆர்வலர் ஸ்ரீஷைல் மேட்டி என்பவர், உப்பார்பேட் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார்.
போலீசாரும் வழக்கு பதிவு செய்து, அனிலுக்கும், கலீமுக்கும் நோட்டீஸ் அனுப்பி, விசாரணைக்கு வரும்படி உத்தரவிட்டுள்ளனர்.
அதன் பிறகே, நிலம் அபகரிக்கப்பட்டது சிறைத்துறை அதிகாரிகளுக்கு தெரிந்தது. இடத்தை பார்வையிட்டு, நிலத்தை மீட்க நடவடிக்கை எடுத்துள்ளனர். பெங்களூரின் இதய பகுதியில் உள்ள, அரசு சொத்துக்கே பாதுகாப்பு இல்லை. சாதாரண மக்களின் நிலை என்ன என, பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர்.
