/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
உதவி ஜெயிலரை தாக்கிய இரண்டு கைதிகள் மீது வழக்கு
/
உதவி ஜெயிலரை தாக்கிய இரண்டு கைதிகள் மீது வழக்கு
ADDED : ஜன 19, 2026 05:51 AM
பெங்களூரு: பரப்பன அக்ரஹாரா சிறையில் உதவி ஜெயிலரை தாக்கிய, இரண்டு கைதிகள் மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் விசாரணை கைதிகள், தண்டனை கைதிகள் என 4,000 பேர் அடைக்கப்பட்டு உள்ளனர். கர்நாடக சிறைக்குள் அதிக சட்ட விரோத செயல்கள் நடக்கும் இடமாக, இந்த சிறை உள்ளது.
கடந்த சில மாதங்களுக்கு முன்பு, ரவுடி குப்பாச்சி சீனா தனது ஆதரவாளர்களுடன் சிறைக்குள் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள், சிறைக்குள்ளேயே வைத்து கைதிகள் மது அருந்தும் வீடியோக்கள், ஒரு பயங்கரவாதி மொபைல் போன் பயன்படுத்தும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இதை அடுத்து சிறையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டன. சிறையின் தலைமை கண்காணிப்பாளராக முதல் முறையாக ஐ.பி.எஸ்., அதிகாரி நியமிக்கப்பட்டார். சிறைத்துறை டி.ஜி.பி., அலோக் குமாரும் சிறைக்குள் சென்று ஆய்வு நடத்தினார்.
இந்நிலையில் கடந்த 7ம் தேதி சிறை உதவி ஜெயிலர், இரண்டு ஊழியர்களை, விசாரணை கைதிகள் ஆனந்த், அப்துல் கனி ஆகியோர் தாக்கிய சம்பவம் தாமதமாக தற்போது வெளிச்சத்துக்கு வந்து உள்ளது. இவர்கள் இருவரும் உதவி ஜெயிலர் அலுவலகத்திற்கு அத்துமீறி நுழைய முயன்றனர். அவர்களை தடுத்ததால் தாக்கி உள்ளனர்.
இது குறித்த புகாரின் பேரில் இரு கைதிகள் மீதும் பரப்பன அக்ரஹாரா போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இச்சம்பவம், சிறையில் என்ன தான் சீர்திருத்தம் செய்தாலும் கைதிகள் அட்டகாசம் தொடர்வதை கட்டுப்படுத்த முடியவில்லை என்பதை காட்டுகிறது.

