/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
இளம் பெண்ணிடம் ரூ.1.75 கோடி மோசடி
/
இளம் பெண்ணிடம் ரூ.1.75 கோடி மோசடி
ADDED : ஜன 19, 2026 05:52 AM

கெங்கேரி: இளம் பெண்ணிடம் 1.75 கோடி ரூபாய் ஏமாற்றிய வாலிபர், அவரது மனைவி, தந்தை மீது வழக்கு பதிவாகியுள்ளது.
பெங்களூரு கெங்கேரியில் வசிப்பவர் விஜய் கவுடா, 31. இவருக்கும், ஒயிட் பீல்டு பகுதியில் வசிக்கும் 25 வயது இளம்பெண்ணான ஐ.டி., ஊழியருக்கும் 2024 ல் அறிமுகம் ஏற்பட்டது.
தன்னை பெரிய தொழிலதிபர் என்றும், தங்கள் குடும்பத்தின் பெயரில் 715 கோடி ரூபாய்க்கு சொத்து உள்ளதாகவும் இளம் பெண்ணிடம், விஜய் கவுடா கூறினார். இதனை உண்மை என்று இளம்பெண் நம்பினார்.
பின், இருவரும் காதலிக்க ஆரம்பித்தனர். கெங்கேரியில் உள்ள தனது வீட்டிற்கு இளம்பெண்ணை அழைத்து சென்ற விஜய் கவுடா, தனது தந்தை போரேகவுடா, 60, மனைவி சவும்யா, 28 ஆகியோரிட ம் இளம்பெண்ணை அறிமுகம் செய்தார். தனது மனைவியை சகோதரி என்று பொய் சொல்லி இளம்பெண்ணை நம்ப வைத்தார்.
இந்நிலையில் தங்கள் சொத்து தொடர்பான வழக்கு அமலாக்க துறையில் உள்ளதாகவும், அந்த சொத்துகளை விடுவிக்க பணம் கொடுத்து உதவும் படியும் இளம் பெண்ணிடம், விஜய் கவுடா கூறினார். இதனை உண்மை என்ற நம்பிய இளம்பெண்ணும் பல தவணைகளில் 1.75 கோடி ரூபாயை விஜய்க்கு கொடுத்து உள்ளார்.
இந்நிலையில் விஜய்க்கு திருமணம் ஆகி மனைவியும், குழந்தையும் இருப்பது பற்றி, கடந்த மாதம் இளம்பெண்ணுக்கு தெரிய வந்தது. தான் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டபோது, பணத்தை கொடுக்க மறுத்ததுடன், 'உன்னால் முடிந்ததை செய்து கொள்' என்று இளம் பெண்ணை விஜய் மிரட்டி உள்ளார்.
இதுகுறித்து ஒயிட்பீல்டு போலீஸ்நிலையத்தில் கடந்த 15ம் தேதி இளம்பெண் புகார் செய்தார். விஜய் கவுடா, போரே கவுடா, சவும்யா மீது வழக்கு பதிவானது. இந்த வழக்கை கெங்கேரி போலீஸ் நிலையத்திற்கு, ஒயிட்பீல்டு போலீசார் நேற்று மாற்றினர். விசாரணை நடக்கிறது.

