/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கழுத்தறுத்து நாயை கொன்ற மேற்கு வங்க பெண் மீது வழக்கு
/
கழுத்தறுத்து நாயை கொன்ற மேற்கு வங்க பெண் மீது வழக்கு
கழுத்தறுத்து நாயை கொன்ற மேற்கு வங்க பெண் மீது வழக்கு
கழுத்தறுத்து நாயை கொன்ற மேற்கு வங்க பெண் மீது வழக்கு
ADDED : ஜூன் 28, 2025 11:15 PM

மஹாதேவபுரா: கழுத்தை அறுத்து நாயை கொன்ற, மேற்கு வங்க மாநில பெண் மீது வழக்கு பதிவாகி உள்ளது.
பெங்களூரு, மஹாதேவபுராவில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் 4வது மாடியில் உள்ள, ஒரு வீட்டில் நேற்று காலை பயங்கர துர்நாற்றம் வீசியது.
சந்தேகம் அடைந்த பக்கத்து வீட்டினர், அந்த வீட்டின் கதவை தட்டினர். ஒரு பெண் கதவை திறந்தார்.
வீட்டில் இருந்து துர்நாற்றம் வருவது பற்றி கேட்டனர். பதில் அளிக்காமல் கதவை பூட்டிக் கொண்டார்.
தகவல் அறிந்த மஹாதேவபுரா போலீசார், அடுக்குமாடி குடியிருப்புக்கு சென்றனர். பெண் தங்கி இருந்த வீட்டின் கதவை தட்டினர். அவர் திறந்தார்.
உள்ளே சென்று பார்த்தபோது, இரண்டு நாய்கள் மயங்கிய நிலையில் கிடந்தன. துர்நாற்றம் வீசிய இடத்தில் சென்று பார்த்தபோது, போலீசார் அதிர்ச்சி அடைந்தனர்.
துணி பண்டலுக்குள் அழுகிய நிலையில், ஒரு நாய் செத்துக் கிடந்தது. இதுபற்றி மாநகராட்சியின் கால்நடை துறைக்கு, போலீசார் தகவல் கொடுத்தனர்.
அங்கு வந்த மாநகராட்சி ஊழியர்கள், நாய் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.
மயங்கிய நிலையில் கிடந்த இரண்டு நாய்களும் மீட்கப்பட்டு, கால்நடை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டன.
அந்த வீட்டில் இருந்த பெண்ணிடம் விசாரித்தபோது, மேற்கு வங்க மாநிலத்தின் திரிபர்ணா, 40, என்பது தெரிந்தது. நாய் எப்படி செத்தது என்று கேட்டபோது, அவர் பதில் சொல்லவில்லை.
பிரேத பரிசோதனை அறிக்கையில், நான்கு நாட்களுக்கு முன்பே, கத்தியால் கழுத்தை அறுத்து நாயை கொன்றதும், இறந்தது லாப்ராடர் இன நாய் என்றும் தெரிந்தது.
திரிபர்ணா, தன் அறையில் சாமி படங்கள் முன்பு மஞ்சள், குங்குமம், எலுமிச்சை பழம் வைத்து பூஜை செய்ததும் தெரிய வந்தது.
மாந்திரீகம் செய்யும் முயற்சியில் நாயை கொன்று இருக்கலாம் என்று, போலீசாருக்கு சந்தேகம் எழுந்துள்ளது. அவர் மீது விலங்கு வதை தடுப்பு சட்டத்தின் கீழ், வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
விசாரணை நடக்கிறது. வீட்டின் கதவு, ஜன்னல் கதவுகளை மூடிவிட்டு செத்துப்போன நாய் உடலுடன், திரிபர்ணா வசித்ததும் தெரிய வந்தது.