கணவரை அடித்து கொன்று நாடகம் மனைவி, மகன் மீது வழக்கு பதிவு
கணவரை அடித்து கொன்று நாடகம் மனைவி, மகன் மீது வழக்கு பதிவு
ADDED : ஜூன் 02, 2026 01:23 AM

ஹாசன்: கணவரை அடித்து கொலை செய்து, அவசரமாக இறுதி சடங்குகள் நடத்திய மனைவியும், மகனும் போலீசாரிடம் சிக்கினர்.
ஹாசன் நகரின் தன்னீருஹள்ளா கிராமத்தில் வசித்தவர் குருமூர்த்தி, 40. இவரது மனைவி வீணா, 35. தம்பதிக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். குருமூர்த்தியின் தாய் ரேணுகம்மா, மைசூரில் வசிக்கிறார். அவ்வப்போது தாயை பார்க்க செல்வார்.
இந்நிலையில் மே 18ம் தேதியன்று, குருமூர்த்தி படுத்த நிலையில் இறந்து கிடந்தார். அவர் மாரடைப்பால் இறந்ததாக உறவினர்கள், அக்கம், பக்கத்தினரிடம் கூறிய வீணா, அவசர, அவசரமாக இறுதி சடங்குகள் ஏற்பாடு செய்தார். மகன் இறந்த தகவலை அறிந்து, தாய் ரேணுகம்மா ஹாசனுக்கு வந்தார்.
கணவரின் உடலை எரிக்க வேண்டும் என, வீணா பிடிவாதம் பிடித்தார். இதனால் சந்தேகமடைந்த ரேணுகம்மாவும், உறவினர்களும் உடலை எரிக்க விடாமல் தடுத்து, மயானத்தில் அடக்கம் செய்தனர். அதன்பின் குருமூர்த்தியின் வீட்டில் இருந்த, கண்காணிப்பு கேமராவின் டி.வி.ஆரை., அவரது மாமா சதாசிவா, மைசூருக்கு கொண்டு சென்றார். அதில் உள்ள காட்சிகளை பார்த்த போது, அதிர்ச்சி அடைந்தார். மே 17ம் தேதி, கணவருடன் வீணா சண்டை போட்டுள்ளார். இவரும், 16 வயது மகனும் குருமூர்த்தியை காலால் உதைத்தனர். பலத்த காயமடைந்த அவரை, கட்டிலில் படுக்க வைத்ததும் பதிவாகியிருந்தது.
தாயின் பெயரில் இருந்த சொ த்துகளை விற்று, பணம் தரும்படி கணவருக்கு வீணா தொல்லை கொடுத்தார். இதை தாய் ரேணு கம்மாவிடம் கூறினார்.
அவரும் மகன் நன்றாக இருக்கட்டும் என, நினைத்து சிறிதளவு நிலத்தை விற்று, 25 லட்சம் ரூபாய் கொடுத்தார். அப்போதும் வீணா திருப்தி அடையாமல், மேலும் பணம் கேட்டார். மே 14ம் தேதியன்று, குருமூர்த்தி மைசூருக்கு தாய் வீட்டுக்கு சென்றார். அப்போது அவரது வயிற்றில் பேன்டேஜ் கட்டியிருப்பதை பார்த்து விசாரித்த போது, மனைவியும், மகனும் தாக்கியதாக கூறினார்.
எனவே மகனின் இறப்பில், ரேணுகம்மாவுக்கு சந்தேகம் இருந்தது. கண்காணிப்பு கேமராவிலும், தாக்கிய காட்சி பதிவாகியிருந்தது. எனவே மே 25ம் தேதி ஹாசன் நகர் போலீஸ் நிலையத்தில், ரேணுகம்மா புகார் அளித்தார். போலீசாரும் புதைக்கப்பட்ட குருமூர்த்தியின் உடலை தோண்டியெடுத்து, பிரேத பரிசோதனை நடத்தினர். அவர் காயங்களால் இறந்தது தெரிந்தது.
இதையடுத்து வீணா மற்றும் அவரது மகனிடம் போலீசார் விசாரிக்கின்றனர்.
