/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
நீறு பூத்த நெருப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை
/
நீறு பூத்த நெருப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை
நீறு பூத்த நெருப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை
நீறு பூத்த நெருப்பாக ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை
ADDED : ஏப் 15, 2025 08:45 PM

கர்நாடகாவில் தாக்கல் செய்யப்பட்ட ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை கசிந்தது முதல், மாநிலத்தில் காங்கிரஸ், பா.ஜ., - ம.ஜ.த.,வில் உள்ள எம்.எல்.ஏ.,க்கள் மத்தியில் ஆதரவும், எதிர்ப்பும் கிளம்பி உள்ளது.
கர்நாடகாவில் கடந்த வாரம் ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை, அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதன் முழு விபரம் குறித்து அமைச்சரவையில் விவாதிப்பதற்கு முன்னதாகவே, அறிக்கையில் இடம் பெற்றிருந்த தகவல்கள், சமூக வலைதளங்கள், ஊடகங்களில் கசிந்தது.
இது கசிந்தது என்பதை விட, வேண்டுமென்றே வெளியிடப்பட்டது என்றே கூற வேண்டும். அறிக்கையில் இருப்பதை கண்டு காங்கிரசில் உள்ள ஒக்கலிகர், லிங்காயத் சமூக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் அதிர்ச்சி அடைந்தனர். அதே நேரம், எஸ்.சி., - எஸ்.டி., சமுதாய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர்.
பா.ஜ., - ம.ஜ.த.,வினர், பல்வேறு மடாதிபதிகள் இந்த அறிக்கையை, 'சந்தர்ப்பவாத அரசியல்' என்று விமர்சித்துள்ளனர். தன் முதல்வர் பதவியை தக்கவைத்துக் கொள்ள, இதுபோன்று முதல்வர் சித்தராமையா நடந்து கொள்கிறார் என்றும் அதிருப்தி தெரிவித்துள்ளனர்.
நாளை நடக்க உள்ள அமைச்சரவை சிறப்பு கூட்டத்தில், ஜாதிவாரி கணக்கெடுப்பு அறிக்கை தொடர்பாக விவாதிக்கப்பட உள்ளது. எனவே கடந்த 13ம் தேதி அனைத்து அமைச்சர்களுக்கும் அறிக்கை நகல்கள் வழங்கப்பட்டு உள்ளன.
அத்துடன் வீரசைவ லிங்காயத் மஹாசபை தலைவரும், காங்கிரஸ் எம்.எல்.ஏ.,வுமான ஷாமனுார் சிவசங்கரப்பா, அறிக்கைக்கு கண்டனம் தெரிவித்ததுடன், 'இது அறிவியல்பூர்வமற்ற அறிக்கை. தரவு சேகரிக்க எங்கள் வீட்டுக்கு யாரும் வரவில்லை' என குற்றஞ்சாட்டினார்.
கர்நாடகாவில் யார் முதல்வராக வர வேண்டும் என்பதை தீர்மானிக்கும் சக்தியாக, ஒக்கலிகர், லிங்காயத் சமுதாயத்தினர் இருந்து வருகின்றனர். இச்சமுதாயத்தினரை பகைத்துக் கொண்டால், சம்பந்தப்பட்ட கட்சி, இறங்குமுகத்தை காண வேண்டி வரும்.
உதாரணமாக, பா.ஜ.,வில் லிங்காயத் சமூகத்தை சேர்ந்த எடியூரப்பாவை, முதல்வர் பதவியில் இருந்து அக்கட்சி இறக்கியது. அன்று முதல் அச்சமுதாயத்தினர், காங்கிரசுக்கு ஆதரவு தெரிவிக்க துவங்கினர்.
ஜாதிவாரி கணக்கெடுப்புக்கு முன்பு, பலமான சமுதாயம் என்று கூறி வந்தனர். அறிக்கைக்கு பின், லிங்காயத் மூன்றாவது இடத்துக்கும், ஒக்கலிகர் நான்காவது இடத்துக்கும் தள்ளப்பட்டனர். இதன் மூலம், தங்களின் செல்வாக்கு குறைந்துவிடுமோ என்று இரு சமுதாய தலைவர்களும் அச்சப்படுகின்றனர்.
மேலும், 10 ஆண்டுகளுக்கு முன்பு எடுக்கப்பட்ட சர்வேயை அமல்படுத்த கூடாது. மீண்டும் புதிய ஆய்வு நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளனர்.
அத்துடன் காங்கிரசில் உள்ள தங்கள் இரு சமுதாய அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களை சந்தித்து, அறிக்கையை அமல்படுத்துவதால் ஏற்படுத்தும் சாதக, பாதகங்கள் குறித்து விவரிக்க உள்ளனர்.
இந்த அறிக்கையை அமல்படுத்தி, தன் பதவியை தக்கவைத்துக் கொள்ள முதல்வர் சித்தராமையா முயற்சிக்கிறார் என்று குற்றஞ்சாட்டி உள்ளனர். நாளை நடக்கும் அமைச்சரவை சிறப்பு கூட்டத்தில் இதை செயல்படுத்த ஆதரவு அளித்தால், அதனால் ஏற்படும் பாதிப்புகளுக்கு அரசே பொறுப்பேற்க நேரிடும் என்றும் சங்கத்தினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
நீறு பூத்த நெருப்பாக உள்ள இவ்விவகாரம், நாளை நடக்கும் அமைச்சரவை சிறப்பு கூட்டத்துக்கு பின் எத்தகைய பாதிப்புகளை ஏற்படுத்தும் என்பதை இப்போதே கணிக்க முடியாது.
- நமது நிருபர் -