/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
வாரத்தில் 3 நாட்கள் காவிரி ஆரத்தி பிருந்தாவன் ஆற்றில் மிதக்கும் மேடை
/
வாரத்தில் 3 நாட்கள் காவிரி ஆரத்தி பிருந்தாவன் ஆற்றில் மிதக்கும் மேடை
வாரத்தில் 3 நாட்கள் காவிரி ஆரத்தி பிருந்தாவன் ஆற்றில் மிதக்கும் மேடை
வாரத்தில் 3 நாட்கள் காவிரி ஆரத்தி பிருந்தாவன் ஆற்றில் மிதக்கும் மேடை
ADDED : மே 15, 2025 11:23 PM

பெங்களூரு: ''கே.ஆர்.எஸ்., அணை பகுதியில் காவிரி ஆரத்தி நிகழ்வை வாரத்தில் மூன்று நாட்கள் நடத்த, அரசு முடிவு செய்து உள்ளது. காவிரி ஆரத்திக்காக கே.ஆர்.எஸ்., அணையின் பிருந்தாவன் பகுதியில் ஆற்றின் நடுவில் மிதக்கும் மேடை அமைக்கப்படும்,'' என்று பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவர் ராம்பிரசாத் மனோகர் கூறினார்.
மைசூரு தசராவை ஒட்டி மாண்டியா கே.ஆர்.எஸ்., அணையில் காவிரி ஆரத்தி நிகழ்ச்சி நடக்கிறது. இந்நிகழ்ச்சியை வெற்றிகரமாக நடத்தி முடிக்க அரசு உயர்மட்ட குழுவை அமைத்து உள்ளது. இந்த குழுவின் தலைவராக தமிழ் ஐ.ஏ.எஸ்., அதிகாரியும், பெங்களூரு குடிநீர் மற்றும் வடிகால் வாரிய தலைவருமான ராம்பிரசாத் மனோகர் நியமிக்கப்பட்டு உள்ளார்.
முதல் கூட்டம்
இந்த உயர்மட்ட குழுவின் முதல் கூட்டம் பெங்களூரில் நேற்று நடந்தது. ஸ்ரீரங்கப்பட்டணா காங்கிரஸ் எம்.எல்.ஏ., ரமேஷ் பண்டிசித்தே கவுடா, எம்.எல்.சி., தினேஷ் கூலிகவுடா மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.
கூட்டம் முடிந்த பின், ராம்பிரசாத் மனோகர் அளித்த பேட்டி:
துணை முதல்வர் சிவகுமாரின் கனவு திட்டமான காவிரி ஆரத்தி, தசரா பண்டிகையின் முதல் நாள் துவங்குகிறது. இதற்கு அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும். தசரா நேரத்தில் தினமும், மற்ற நாட்களில் வாரத்தில் வெள்ளி, சனி, ஞாயிற்றுக் கிழமைகளிலும் காவிரி ஆரத்தி நிகழ்வு நடத்த அரசு முடிவு உள்ளது.
இதன் மூலம் உள்ளூர்வாசிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்க முன்னுரிமை அளிக்கப்படும். சமீபத்தில் சாம்ராஜ் நகரில் நடந்த அமைச்சரவை கூட்டத்தில், காவிரி ஆரத்திக்கு 92 கோடி ரூபாய் செலவு செய்ய முடிவு எடுக்கப்பட்டது. காவிரி ஆரத்திக்காக கே.ஆர்.எஸ்., அணையின் பிருந்தாவன் பகுதியில் ஆற்றின் நடுவில் மிதக்கும் மேடை அமைக்கப்படும்.
முன்னுரிமை
கழிப்பறைகள், வாகன நிறுத்துமிடம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்படும். கலாசார நிகழ்ச்சி, இசை நீருற்று, லேசர் நிகழ்ச்சி, வாணவேடிக்கை இடம்பெறும். கலாசார நிகழ்ச்சியில் உள்ளூர் கலைஞர்களுக்கு முதல் முன்னுரிமை அளிக்கப்படும். ஹோட்டல் துறை வளர்ச்சிக்காக திட்டம் வகுக்கப்படும். காவிரி ஆரத்தி நிரந்தரமாக நடத்த இருப்பதால் நிறைய செலவுகள் செய்ய வேண்டி இருக்கும்.
எனவே ஆரத்தியை பார்க்க வருவோரிடம் டிக்கெட் கட்டணம் வசூலிப்பது பற்றி, துணை முதல்வருடன் ஆலோசித்து இறுதி முடிவு எடுக்கப்படும். ஒவ்வொரு நாளும் 8,000 பேர் முதல் 10,000 பேர் வரை அமர்ந்து பார்க்க ஏற்பாடு செய்யப்படும். கும்பமேளாவில் செய்யப்பட்டது போன்று கூடாரம் அமைக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.