/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெண்களுக்காக இயங்கும் காவிரி கன்யா குருகுலம்
/
பெண்களுக்காக இயங்கும் காவிரி கன்யா குருகுலம்
ADDED : மே 11, 2025 11:11 PM

இன்றைய காலத்தில் கல்வி என்பது, பணம் சம்பாதிக்கும் தொழிலாகிவிட்டது என்பது, அனைவருக்கும் தெரியும். பல தனியார் பள்ளிகள் கட்டணம் என்ற பெயரில், பெற்றோரிடம் பணம் பறிக்கின்றன. ஆனால் மாண்டியாவில் உள்ள ஒரு குருகுலம், பெண்களுக்கு இலவசமாக உணவு, தங்கும் இடத்துடன் கல்வி வழங்குகிறது.
மன்னர்கள் ஆட்சி காலத்தில், குருகுலம் என்ற பெயரில் கல்விக்கூடம் இருந்தது. குடில்களில் கல்வி, வேதங்கள் போதிக்கப்படும். பல கலைகள் கற்றுத் தரப்படும். நாட்கள் செல்ல, செல்ல கல்வி என்பது பெரிய தொழிலாக வளர்ந்துள்ளது. எந்த தனியார் பள்ளிகளுக்கு சென்றாலும், லட்சம், லட்சமாக டொனேஷன் கொடுக்க வேண்டும். இந்த கல்வி நிறுவனங்கள் வெட்கப்படும் அளவுக்கு, மாண்டியாவில் அற்புதமான குருகுலம் உள்ளது. இங்கு பெண்களுக்கு இலவச கல்வி அளிக்கப்படுகிறது.
உணவு, தங்கும் வசதியும் கிடைக்கிறது. கல்வியுடன் வேதங்கள், உபநிஷத்துகள் குறித்தும் பயிற்சி அளிக்கப்படுகிறது. மாண்டியா மாவட்டம், ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகாவின், பொம்மூர் அக்ரஹாராவில் குருகுலம் அமைந்துள்ளது. ராதா கிருஷ்ணர் என்பவர் 12 ஆண்டுகளுக்கு முன், இங்குள்ள காவிரி ஆற்றங்கரையில், 'காவிரி கன்யா குருகுலம்' அமைத்தார். தற்போது சுப்ரமண்யாவும், அவரது மகள் அபூர்வாவும், இந்த குருகுலத்தை சிறப்பாக நடத்துகின்றனர்.
இது குறித்து, குருகுலத்தின் நிர்வாகிகள் கூறியதாவது:
பெண்களின் நலனுக்காகவும், அவர்களுக்கு தலைமை குணங்களை ஏற்படுத்தவும் குருகுலம் அமைக்கப்பட்டது. பெண்களுக்கு ஐந்து ஆண்டு வரை, இலவச கல்வி அளிக்கப்படுகிறது. வேதம், உபநிஷத்து, சமஸ்கிருதம், ஆங்கிலம், கம்ப்யூட்டர், யோகா, தியானம் கற்றுத்தரப்படுகிறது. ஸ்லோகம், பகவத் கீதை பாராயணம் செய்யப்படுகிறது.
எதிர்காலத்தில் பெண்கள் யாரையும் சாராமல், சுதந்திரமாக வாழ்க்கை நடத்தும் வகையில், இந்த குருகுலம் செயல்படுகிறது. இங்கு கல்வியை முடித்த பல பெண்கள், நல்ல முறையில் வாழ்க்கையை அமைத்து கொண்டுள்ளனர். காவிரி கன்யா குருகுலத்தில் கல்வி பெற்ற மாணவியரே, தற்போது தார்வாடில் குருகுலம் கிளை திறந்துள்ளனர். இங்கும் இலவச கல்வி அளிக்கப்படுகிறது. பெண்கள் அதிக எண்ணிக்கையில் சேர்ந்துள்ளனர்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது நிருபர் -