மேகதாது திட்டத்தில் பிரதமர் தலையீடு காவிரி கிரியா சமிதி வலியுறுத்தல்
மேகதாது திட்டத்தில் பிரதமர் தலையீடு காவிரி கிரியா சமிதி வலியுறுத்தல்
ADDED : மே 29, 2026 12:12 AM
மைசூரு: 'மேகதாது திட்டம் விஷயத்தில், பிரதமர் நரேந்திர மோடி தலையிட வேண்டும்' என, காவிரி கிரியா சமிதி வலியுறுத்தியது.
இது குறித்து, காவிரி கிரியா சமிதி கவுரவ தலைவர் மஞ்சேகவுடா, மைசூரில் அளித்த பேட்டி:
தமிழக முதல்வர் விஜய், பிரதமர் மோடியை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு அனுமதி அளிக்க கூடாது என, வேண்டுகோள் விடுத்துள்ளார்.
மேகதாது திட்டம் இரண்டு மாநிலங்களுக்கும், உதவியாக இருக்கும். ஜனாதிபதி, பிரதமர். மத்திய நீர்ப்பாசனத்துறை அமைச்சரை சந்தித்து, மேகதாது திட்டத்துக்கு ஒப்புதல் அளிக்கும்படி, காவிரி கிரியா சமிதியினர் வேண்டுகோள் விடுப்போம்.
மேகதாது விஷயத்தில், பிரதமர் மத்தியஸ்தம் செய்து, விரைவில் திட்டத்தை செயல்படுத்த, அனுமதி அளிக்க வேண்டும். காவிரி உற்பத்தியாவது, கர்நாடகாவின் குடகு மாவட்டத்தில் இங்கு உற்பத்தியாகும் தண்ணீர், மாநிலத்துக்கு பயன்பட வேண்டும்.
வீணாக கூடாது என்ற நோக்கில், மேகதாதுவில் அணை கட்ட, அரசு திட்டமிட்டுள்ளது. அணை கட்டுவதால், தமிழகத்துக்கு தண்ணீர் பிரச்னை ஏற்படாது.
கடந்த, 1974ல் நடந்த காவிரி நீர் தொடர்பான ஒப்பந்தத்தை, மறு பரிசீலனை செய்ய வேண்டும். அரசியல் கட்சிகளின் மோதலால், கர்நாடகாவில் காவிரி விவாதம் இன்றைக்கும் நீடிக்கிறது. தமிழகத்தில் நீர், நிலம், மொழி விஷயம் என்றால், கட்சிபாகுபாடு மறந்து, அனைத்து கட்சியினரும் ஒற்றுமையாகின்றனர்.
ஆனால் நம்மிடம் அந்த ஒற்றுமை இல்லை. கருத்து வேறுபாட்டை ஒதுக்கிவிட்டு, கட்சி பாகுபாடின்றி, பிரதமரை சந்தித்து காவிரி நீர் பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும். தமிழகத்தில் எந்த அரசு வந்தாலும், காவிரி நீர் விவகாரத்தில் குரல் எழுப்புகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
