/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை? சித்தராமையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
/
'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை? சித்தராமையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை? சித்தராமையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணை? சித்தராமையாவுக்கு ஐகோர்ட் நோட்டீஸ்!
ADDED : ஏப் 17, 2025 01:21 AM

பெங்களூரு : 'முடா' வழக்கில் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட கோரிய மனுவுக்கு, முதல்வர் சித்தராமையா உட்பட நால்வருக்கு நோட்டீஸ் அனுப்ப, கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.
கர்நாடகாவில், முதல்வர் சித்தராமையா தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது.
'முடா' எனும் மைசூரு நகர மேம்பாட்டு ஆணையத்தின் வாயிலாக, தன் மனைவிக்கு 14 வீட்டு மனைகள் பெற்றதாக, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மனைவியின் சகோதரர் மல்லிகார்ஜுனசாமி, தேவராஜ் ஆகியோர் மீது, லோக் ஆயுக்தா, அமலாக்க துறையிடம், சமூக ஆர்வலர் ஸ்நேகமயி கிருஷ்ணா புகார் அளித்திருந்தார்.
கவர்னர் ஒப்புதல் அளித்த அன்றே, இவ்வழக்கை சி.பி.ஐ.,க்கு மாற்ற வேண்டும் என்று உயர் நீதிமன்றத்தில் ஸ்நேகமயி கிருஷ்ணா வழக்கு தொடர்ந்திருந்தார். இவ்வழக்கை விசாரித்த தனி நீதிபதி, ஸ்நேகமயி கிருஷ்ணாவின் மனுவை தள்ளுபடி செய்தார்.
இந்த உத்தரவை எதிர்த்து இரு அமர்வு கொண்ட பெஞ்சில், ஸ்நேகமயி கிருஷ்ணா மேல்முறையீடு செய்திருந்தார். இம்மனு, நேற்று தலைமை நீதிபதி அஞ்சாரியா, நீதிபதி அரவிந்த் ஆகியோர் முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள், 'பிரிவு 226ன் கீழ், தாக்கல் செய்யப்பட்ட இம்மனுவில், தனி நீதிபதியின் உத்தரவுக்கு எதிராக சவால் விடுக்கிறீர்களா' என்று கேள்வி எழுப்பினர்.
மனுதாரர் வக்கீல் ராகவன் வாதிடுகையில், ''தனி நீதிபதி உத்தரவுக்கு சவால் விடுக்கவில்லை,'' என்றார்.
நீதிபதிகள் கூறுகையில், 'மனுதாரரின் மனு தொடர்பாக விளக்கம் அளிக்கும்படி, முதல்வர் சித்தராமையா, அவரது மனைவி பார்வதி, மனைவியின் சகோதரர் மல்லிகார்ஜுனசாமி, தேவராஜ் ஆகிய நால்வருக்கு நோட்டீஸ் அனுப்புங்கள். இவ்வழக்கு விசாரணை, ஏப்., 28ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுகிறது,'' என்றார்.

