மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நிறைவேற்றிய நட்சத்திர தம்பதி
மண் சோறு சாப்பிட்டு வேண்டுதல் நிறைவேற்றிய நட்சத்திர தம்பதி
ADDED : ஜூன் 01, 2026 12:19 AM

உடுப்பி: நட்சத்திர தம்பதி வசிஷ்டா சிம்ஹா - ஹரிப்ரியா தங்களுக்கு குழந்தை பிறந்ததால், கிருஷ்ணர் மடத்தில் மண் சோறு சாப்பிட்டு, வேண்டுதல் நிறைவேற்றினர்.
கன்னடத்தில் பல வெற்றி படங்களில் நடித்தவர், நடிகை ஹரிப்ரியா. தமிழிலும் சில படங்களில் நடித்துள்ளார். நடிகர் வசிஷ்டா சிம்ஹாவும் பல படங்களில் நடித்தவர்.
இவர்கள் காதலித்து, இரண்டு குடும்பத்தினர் சம்மதத்துடன், சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர். திருமணத்துக்கு பின் உடுப்பியின், கிருஷ்ணர் மடத்துக்கு வந்த தம்பதி, தங்களுக்கு குழந்தை பிறந்தால், இங்கு வந்து மண் சோறு சாப்பிடுவதாக, வேண்டுதல் வைத்தனர்.
அதன்படி, தம்பதிக்கு, ஆண் குழந்தை பிறந்தது. வேண்டுதல் நிறைவேறியதால் நேற்று குழந்தையுடன் உடுப்பியின் கிருஷ்ணர் மடத்துக்கு வந்தனர். கிருஷ்ணரை தரிசனம் செய்தனர்.
அதன் பின், பிற பக்தர்களுடன் அமர்ந்து, மண் சோறு சாப்பிட்டு வேண்டுதலை நிறைவேற்றினர்.
இது குறித்து, வசிஷ்டா சிம்ஹா கூறியதாவது:
கடந்த ஒன்றரை ஆண்டுக்கு முன், நாங்கள் கிருஷ்ணர் கோவிலுக்கு வந்து, தரிசனம் செய்தோம். எங்களுக்கு குழந்தை பிறக்க வேண்டும் என, பிரார்த்தனை செய்தோம். கடவுளின் அனுகிரகத்தால், எங்களுக்கு மகன் பிறந்துள்ளான்.
எங்களின் நம்பிக்கை பொய்க்கவில்லை. நாங்கள் இங்கு வந்து மண் சோறு சாப்பிட்டு, வேண்டுதலை நிறைவேற்றினோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
