/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் பாதை உரிமை கோரும் மத்திய - மாநில அரசுகள்
/
பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் பாதை உரிமை கோரும் மத்திய - மாநில அரசுகள்
பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் பாதை உரிமை கோரும் மத்திய - மாநில அரசுகள்
பெங்களூரு மெட்ரோ ரயில் மஞ்சள் பாதை உரிமை கோரும் மத்திய - மாநில அரசுகள்
ADDED : ஆக 08, 2025 04:07 AM

பெங்களூரு: மெட்ரோ மஞ்சள் வழித்தடத்தில், ரயில் இயக்க உள்ள நிலையில், மத்திய, மாநில மக்கள் பிரதிநிதிகளிடையே மெட்ரோ திட்டத்தில் தங்கள் பங்களிப்பே அதிகம் என, காரசாரமாக கருத்து மோதல் ஏற்பட்டு வருகிறது.
பெங்களூரில் தெற்கு பகுதிகளை மெட்ரோ ரயில் மூலமாக இணைப்பதற்காக, ஆர்.வி., சாலை முதல் பொம்மசந்திரா வரை 19.15 கி.மீ., துாரத்துக்கு மஞ்சள் வழித்தடம் அமைக்கப்பட்டது. இந்த வழித்தடத்தில், ரயில் சேவையை துவக்கி வைக்க, பிரதமர் நரேந்திர மோடி வரும் 10ம் தேதி பெங்களூரு வருகிறார்.
அனுபவம் இல்லை துணை முதல்வர் சிவகுமார், நேற்று முன்தினம் மஞ்சள் வழித்தடத்தில் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்தார். பின் அவர் கூறுகையில், ''மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில், மத்திய அரசின் பங்கு 50 சதவீதம்; மாநில அரசின் பங்கு 50 சதவீதம். மெட்ரோ என்பது மத்திய அரசுக்கு மட்டும் சொந்தமானதல்ல.
''ரயில் சேவை துவக்குவதில் தேஜஸ்வி சூர்யா எம்.பி., அவசரப்படுகிறார். அவருக்கு அனுபவம் கிடையாது. மெட்ரோ ரயில் நம்முடையது. இதில், மாநில அரசின் பங்களிப்பே அதிகம். திறப்பு விழாவுக்கு வருமாறு பிரதமரை நானும், முதல்வர் சித்தராமையாவும் தான் அழைத்தோம்,'' என்றார்.
இதுபோல, காங்கிரசில் உள்ள பலரும் மெட்ரோ ரயிலின் மஞ்சள் வழித்தடத்தில், மாநில அரசின் பங்கே அதிகம் என கூறிக் கொண்டனர்.
இதற்கு பதிலடி தரும் வகையில், தேஜஸ்வி சூர்யா கூறியது:
ஆர்.சி.பி., அணி கோப்பையை வென்றதற்கு மாநில அரசு தான் காரணம் என காங்கிரஸ் உரிமை கோரியது. அது போல, தற்போது மெட்ரோ ரயிலிலும் பங்கு கோருகிறது. பிரதமர் மோடி, மஞ்சள் வழித்தடத்தில், மெட்ரோ சேவையை துவக்கி வைப்பார். மெட்ரோ மூன்றாம் கட்ட திட்டத்திற்கும் அடிக்கல் நாட்டுவார்.
கவலையில்லை துணை முதல்வர் சிவகுமாருக்கு மெட்ரோ ரயிலை பற்றி கவலை கிடையாது. மக்கள் போக்குவரத்து நெரிசலில் இருந்து தப்புவதற்காக, மெட்ரோ சேவை விரைவாக திறக்கப்படுகிறது. இதை அவர் அவசரம் என விமர்சிக்கிறார்.
காங்கிரஸ் அரசு தாமதமாக செயல்படும் என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. 2.5 கி.மீ., நீளமுள்ள ஈஜிபுரா மேம்பாலப் பணிகள் எட்டு ஆண்டுகளாக நடக்கின்றன.
காங்கிரஸ் ஆட்சியில் இந்திரா காலத்தில் துவக்கப்பட்ட திட்டம், ராகுல் காலத்தில் தான் நிறைவேறும். இதனால், அவர்களுக்கு அனைத்தும் அவசரம் போலவே தோன்றும்.
மெட்ரோ திட்டம் மத்திய அரசினுடையது. இந்த பாதையில் ரயில் சேவையை துவக்குவதற்காக, பல அதிகாரிகளிடம் பேசி உள்ளேன். மத்தியில் பா.ஜ., ஆட்சி அமைத்த பிறகே, பெங்களூரில் மெட்ரோ ரயில் சேவை நீட்டிக்கப்பட்டது.
இவ்வாறு அவர் கூறினார்.
சரியல்ல! மெட்ரோ ரயில் திட்டங்கள் பா.ஜ., ஆட்சியிலே விறுவிறுப்பாக நடந்தன. பெங்களூருக்கு வரும் பிரதமர் நரேந்திர மோடியை அனைவரும் உற்சாகத்துடன் வரவேற்க வேண்டும். மெட்ரோ ரயில் மஞ்சள் பாதையை, காங்கிரஸ் அரசு சொந்தம் கொண்டாடுவது சரியல்ல. விஜயேந்திரா, பா.ஜ., மாநில தலைவர்.