மசாலா பொருட்களின் தரம் ஆய்வு மத்திய அளவிலான குழு அமைப்பு
மசாலா பொருட்களின் தரம் ஆய்வு மத்திய அளவிலான குழு அமைப்பு
ADDED : ஆக 19, 2026 11:21 PM
பெங்களூரு: கர்நாடக அரசின் கோரிக்கையை ஏற்று, மசாலா பொருட்களின் பயன்பாடு மற்றும் தர நிலை குறித்து ஆய்வு செய்ய, மத்திய அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர் பல்வேறு பகுதிகளில் மசாலா பொருட்களை சேகரித்து, ஆய்வகத்துக்கு அனுப்பி வருகின்றனர்.
கர்நாடகாவில் உணவு பாதுகாப்பு துறையினர், நட்சத்திர ஹோட்டல்களில் நடத்திய சோதனையில் அழுகிய இறைச்சி, காலாவதியான பொருட்களை பறிமுதல் செய்தனர்.
அதை தொடர்ந்து, அரசு அலுவலக உணவகங்கள், அங்கன்வாடி மையங்கள், சமூக நலத்தறை உணவகங்களிலும் ஆய்வு மேற்கொண்டனர். மாநிலம் முழுதும், 2,400க்கும் மேற்பட்ட உணவு மாதிரிகள் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டன. விதிமுறைகளை மீறிய, 206 ஹோட்டல்களுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.
இந்நிலையில், மத்திய எப்.எஸ்.எஸ்.ஏ.ஐ., எனும் இந்திய உணவு பாதுகாப்பு மற்றம் தர ஆணையத்திற்கு மாநில உணவு பாதுகாப்பு துறை கோரிக்கை விடுத்திருந்தது.
அதி ல், உணவுகளுக்கு பயன்படுத்தப்படும் கரம் மசாலா, சிக்கன் மசாலா, பிரியாணி பொடி, சாம்பார் பொடி, ரசப்பொடி உட்பட பல்வேறு ரெடிமேட் மசாலா பொடிகளில், செயற்கை வண்ணங்கள், இ.டி.ஓ., எனும், 'எத்திலீன்ஆக்சைடு' பயன்படுத்தப்படுகிறது. மசாலா பொருட்களின் தரத்தை ஆய்வு செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என்று கோரிக்கை விடுத்திருந்தது.
இதை யடுத்து, மத்திய அளவில் குழு அமைக்கப்பட்டு உள்ளது. இக்குழுவினர், கர்நாடகாவில் உள்ள மசாலா தயாரிப்பு நிறுவனங்கள், பேக்கிங் பிரிவுகள், விற்பனை நிலையங்களில் இருந்து மிளகாய் துாள், மஞ்சள் துாள், மிளகுத்துாள், மசாலா கலைகள் போன்ற பல்வேறு மாதிரிகளை சேகரித்து வருகின்றனர்.
சேகரிக்கப்பட்ட இந்த மாதிரிகள் அனைத்தும் மத்திய, மாநில அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களுக்கு அனுப்பப்படும். ஆய்வில் அனுமதிக்கப்பட்ட அளவை விட, அதிகமாக ரசாயனங்கள், செயற்கை நிறமூட்டிகள் அல்லது பூச்சிக்கொல்லி எச்சங்கள் உள்ளனவா என்று ஆய்வு செய்யப்படும்.
உள்நாட்டில் விற்கப்படும் மசாலாக்களின் தரம் உறுதி செய்வதோடு, சர்வதேச சந்தையிலும் இந்திய மசாலா பொருட்களின் நற்பெயரை தக்கவைக்க, மத்திய மசாலா வாரியம் மற்றும் தரக்கட்டுப்பாட்டு அமைப்புகள் இணைந்து செயல்படுகின்றன.
தரம் குறைந்த, காலாவதியான அல்லது போலி லேபிள்கள் கொண்ட மசாலா பொருட்கள் கண்டறியப்பட்டால், சம்பந்தப்பட்ட நிறுவனங்களின் உரிமம் ரத்து செய்யப்படும்.
அந்நிறுவனத்தின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் மத்திய, மாநில அதிகாரிகள் தயாராகி வருகின்றனர்.
