/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கார்கே குடும்பத்திற்கு கடும் சவால்; முண்டா தட்டும் சலவாதி நாராயணசாமி
/
கார்கே குடும்பத்திற்கு கடும் சவால்; முண்டா தட்டும் சலவாதி நாராயணசாமி
கார்கே குடும்பத்திற்கு கடும் சவால்; முண்டா தட்டும் சலவாதி நாராயணசாமி
கார்கே குடும்பத்திற்கு கடும் சவால்; முண்டா தட்டும் சலவாதி நாராயணசாமி
ADDED : ஜூலை 30, 2025 08:54 AM

காங்கிரஸ் தேசிய தலைவராக உள்ள, மல்லிகார்ஜுன கார்கேயின் சொந்த ஊர் பீதர் மாவட்டம், வரவட்டி என்றாலும், அவருக்கு அரசியல் வாழ்க்கை கொடுத்தது கலபுரகி மாவட்டம் தான். கடந்த 1972 முதல் 2008 வரை கலபுரகியின் குருமிட்கல் சட்டசபை தொகுதியில் எட்டு முறையும், 2008ல் சித்தாபூரில் ஒரு முறையும் வெற்றி பெற்றவர்.
பின், தேசிய அரசியலுக்கு சென்றவர் 2009, 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலில், கலபுரகி தொகுதியில் இருந்து தொடர்ந்து வெற்றி பெற்று, அசைக்க முடியாத தலைவராக வலம் வந்தார். ஆனால், 2019 லோக்சபா தேர்தலில், தன்னிடம் அரசியல் கற்று, பா.ஜ.,வுக்கு தாவிய தனது சிஷ்யன் உமேஷ் ஜாதவிடம் தோல்வி அடைந்தார்.
மல்லிகார்ஜுன கார்கே தொடர்ந்து வெற்றி பெற்றதற்கு, அவருடன் இருந்த உமேஷ் ஜாதவ், பாபுராவ் சின்சன்சூர், சலவாதி நாராயணசாமி ஆகியோர் தான் காரணம். எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த, இந்த மூன்று தலைவர்களும், கார்கேவுக்கு தோளோடு தோளாக நின்றவர்கள்.
மும்மூர்த்திகள் ஆனால், இவர்களை அரசியல்ரீதியாக கார்கே குடும்பம் வளர விடவில்லை. இதனால் மூன்று பேரும் பா.ஜ.,வில் இணைந்தனர். பாபுராவ் சின்சன்சூர் மட்டும், காங்கிரசுக்கு திரும்பி விட்டார். மற்ற இருவரும் பா.ஜ.,வில் உள்ளனர். அதிலும் சலவாதி நாராயணசாமி மேல்சபை எதிர்க்கட்சி தலைவராக உள்ளார்.
காங்கிரசில் இருந்து வந்தவர் என்பதால், காங்கிரசுக்குள் நடக்கும் உட்கட்சி அரசியல் பற்றி நன்கு தெரிந்து வைத்து உள்ளார். இதனால் காங்கிரஸ் அரசுக்கு எதிராக தினமும் வசைபாடுகிறார். சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் அசோக்கை விட, காங்கிரஸ் அரசை ஒரு படி மேலே சென்று தாக்கி பேசுகிறார்.
இதுமட்டுமின்றி மல்லிகார்ஜுன கார்கே, அவரது மகனும், கர்நாடக கிராம பஞ்சாயத்து ராஜ் அமைச்சருமான பிரியங்க் கார்கேவுக்கு எதிராகவும், சலவாதி நாராயணசாமி அரசியல் செய்து வருகிறார்.
தந்தை - மகனை தினமும் தாக்கி பேசுகிறார். கார்கேயும், அவரது மகனும் அரசியல் ரீதியாக செய்யும் தவறுகளை, வெளிச்சம் போட்டு காட்டுவதில் ஆர்வம் காட்டுகிறார்.
5 ஏக்கர் நிலம் கடந்த சில மாதங்களுக்கு முன், கார்கேயின் இரண்டாவது மகன் ராகுல் கார்கே நடத்தும் நிறுவனத்திற்கு, அரசு 5 ஏக்கர் நிலத்தை ஒதுக்கியது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் பா.ஜ., போராட்டம் நடத்தியது. இந்த போராட்டத்தை முன்நின்று நடத்தியவர் சலவாதி நாராயணசாமி. இதன் பலனாக அரசு ஒதுக்கிய, 5 ஏக்கர் நிலத்தை கார்கே குடும்பம் திரும்ப கொடுத்தது.
கலபுரகி அரசியலில், கார்கே குடும்பத்தினருக்கு, பா.ஜ., பிரமுகர் மணிகாந்தா ரத்தோட் மட்டும் சவாலாக இருந்த நிலையில், தற்போது சலவாதி நாராயணசாமியும் கடும் சவாலாக மாறி உள்ளார்.
கார்கே குடும்பத்திற்கு எதிராக துணிந்து போராடுவதால், சலவாதி நாராயணசாமிக்கு, பா.ஜ., மேலிடத்திடம் நல்ல செல்வாக்கு உள்ளது. அதே நேரம், வளர்த்த கடா மார்பில் பாய்வதை கார்கே குடும்பத்தினராலும் தாங்க முடியவில்லை.
- நமது நிருபர் -