/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை ஆந்திராவுக்கு கேட்கிறார் சந்திரபாபு நாயுடு
/
பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை ஆந்திராவுக்கு கேட்கிறார் சந்திரபாபு நாயுடு
பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை ஆந்திராவுக்கு கேட்கிறார் சந்திரபாபு நாயுடு
பெங்களூரின் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை ஆந்திராவுக்கு கேட்கிறார் சந்திரபாபு நாயுடு
ADDED : மே 26, 2025 11:36 PM

பெங்களூரு : பெங்களூரில் உள்ள ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை, ஆந்திராவுக்கு கொண்டு செல்ல, அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு முயற்சிக்கிறார்.
'கர்நாடகாவில் அடிப்படை வசதிகள் இல்லை' என, காரணம் கூறுகிறார். ஆனால், 'இப்படி கேட்பது சரியல்ல' என, கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல் அதிருப்தி தெரிவித்துள்ளார்.
பெங்களூரில் கடந்தாண்டு, கன மழை பெய்ததில், ஐ.டி., நிறுவனங்கள் அதிகம் உள்ள பகுதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அந்நிறுவனங்களின் ஊழியர்கள் அதிருப்தி தெரிவித்தனர்.
இவர்களின் கோபத்தை சாதகமாக பயன்படுத்த முயற்சித்த, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சி பிரமுகர் லோகேஷ், பெங்களூரின் ஐ.டி., நிறுவனங்களை ஆந்திராவுக்கு வரும்படி, அழைப்பு விடுத்திருந்தார்.
தற்போது லோகேஷின் தந்தையும், ஆந்திர முதல்வருமான சந்திரபாபு நாயுடு, பெங்களூரில் இயங்கி வரும் மத்திய அரசு சார்ந்த ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை, ஆந்திராவுக்கு கொண்டு செல்ல முயற்சிக்கிறார்.
'நிடி ஆயோக்' கூட்டம் மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்க, சந்திரபாபு நாயுடு டில்லியில் தங்கியுள்ளார். கடந்த 24ம் தேதி, மத்திய ராணுவத் துறை அமைச்சரான ராஜ்நாத்சிங்கை சந்தித்து பேசினார்.
அப்போது, 'மத்திய அரசு சார்ந்த ஹெச்.ஏ.எல்., நிறுவனம், அடுத்த ஆண்டுக்குள் 2.50 லட்சம் கோடி ரூபாய் மதிப்புள்ள உற்பத்திகளை ராணுவத்துக்கு தயாரித்து கொடுக்க வேண்டும்.
ஆனால், பெங்களூரில் செயல்படும் ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தில், ராணுவத்துக்கு தேவையான போர் விமானங்களை தயாரிக்க, தேவையான இட வசதி, அடிப்படை வசதிகள் இல்லை.
'ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தில் போர் விமானங்கள் தயாரிக்க, நாங்கள் உதவுகிறோம். நிறுவனத்தை எங்கள் மாநிலத்துக்கு தாருங்கள். இதற்காக பெங்களூரில் இருந்து, சில மணி நேர பயண துாரத்தில் உள்ள லேபாக்ஷி - மடஷிரா அருகில், ஆந்திராவுக்கு சொந்தமான, 10,000 ஏக்கர் நிலத்தை கொடுக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்' என, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.
இது குறித்து, கர்நாடக தொழில் துறை அமைச்சர் எம்.பி.பாட்டீல், பெங்களூரில் நேற்று அளித்த பேட்டி:
பெங்களூரில் இயங்கி வரும், ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தை, தங்கள் மாநிலத்துக்கு அளிக்கும்படி, ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, மத்திய அரசிடம் வேண்டுகோள் விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. நாட்டின் நடைமுறையை அவர் நன்கு அறிந்தவர்.
ஹெச்.ஏ.எல்., நிறுவனத்தின் கிளையை தங்கள் மாநிலத்திலும் அமைக்கும்படி மத்திய அரசிடம் கேட்டிருந்தால், அதில் தவறேதும் இல்லை.
ஆனால், அந்த நிறுவனத்தையே ஆந்திராவுக்கு மாற்றும்படி கேட்பது சரியல்ல. இது மாநிலங்களுக்கு இடையிலான கூட்டமைப்பு நடைமுறைக்கு உகந்தது அல்ல. இது குறித்து, நமது அரசு ஆலோசனை நடத்தும்.
'ஏரோ ஸ்பேஸ் மற்றும் டிபென்ஸ் காரிடார் விஷயத்தில், கர்நாடகாவின் பங்களிப்பு 65 சதவீதம் உள்ளது.
உலகிலேயே நமது மாநிலம் மூன்றாவது இடத்தில் உள்ளது. இவ்வளவு திறன் பெற்றிருந்தும், 'டிபென்ஸ் காரிடார்' திட்டத்தை, உத்தரபிரதேசம் மற்றும் தமிழகத்துக்கு, மத்திய அரசு வழங்கியுள்ளது.
தகுதி அடிப்படையில், நமது மாநிலத்துக்கு அளித்திருக்க வேண்டும். விரைவில் மத்திய ராணுவ அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்து பேசுவேன். 'டிபென்ஸ் காரிடார்' எங்கள் மாநிலத்தின் உரிமை என்பதை வலியுறுத்துவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.