மட்டன், சிக்கனுக்கு கைதிகளிடம் கட்டணம் வசூல் மாண்டியா மத்திய சிறையில் முறைகேடு புகார்
மட்டன், சிக்கனுக்கு கைதிகளிடம் கட்டணம் வசூல் மாண்டியா மத்திய சிறையில் முறைகேடு புகார்
ADDED : ஆக 27, 2026 08:32 PM
மாண்டியா: மாண்டியா சிறை அதிகாரிகள், ஆட்டுக்கறிக்கு 1,250 ரூபாய்; கோழிக்கறிக்கு 700 ரூபாயும் கட்டணம் வசூலிப்பதாக, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமாருக்கு, விசாரணை கைதிகள் கடிதம் எழுதி உள்ளனர்.
கர்நாடக சிறைகளில், வி.ஐ.பி., கைதிகள், பயங்கரவாதிகள், கொலை குற்றவாளிகளுக்கு ராஜ உபசாரம் நடப்பதை, அவ்வப்போது வீடியோவாகவும், போட்டோவாகவும் வெளிவந்து கொண்டிருக்கின்றன.
இந்நிலையில், மாண்டியா சிறையில் நடக்கும் முறைகேடுகள் தொடர்பாக, சிறைத்துறை டி.ஜி.பி., அலோக்குமாருக்கு, 15 விசாரணை கைதிகள், தங்கள் கைரேகை பதிந்த கடிதம் எழுதி உள்ளனர்.
அதில் குறிப்பிட்டு உள்ளதாவது:
சிறை எஸ்.பி., சாந்தம்மா, ஊழியர்கள் அனில், சிவராஜ், ரவி ஆகியோர், கைதிகளிடம் பணம் வாங்குகின்றனர்.
கைதிகளின் விருப்பத்துக்கு ஏற்ப சிறப்பு உணவுகளை தயாரித்து வழங்க, அவர்களுக்கு பணம் வழங்க வேண்டும். 1 கிலோ ஆட்டுக்கறிக்கு 1,250 ரூபாய்; 1 கிலோ கோழிக்கறிக்கு 700 ரூபாயும் கட்டணம் வசூலிக்கின்றனர்.
பணம் தராத கைதிகளை பிரம்பால் அடி வழங்கப்படும் என்று மிரட்டுகின்றனர். அத்துடன் சிறை அறைகளுக்கு ஏற்ப மாத கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. ஒன்றாவது அறைக்கு, 10 ஆயிரம் ரூபாய்; 3, 4வது சிறை அறைகளுக்கு தலா 15,000, 5வது சிறை அறைக்கு 5 ஆயிரம் ரூபாய்; 6வது சிறை அறைக்கு 2 ஆயிரம் ரூபாய்; தண்டனை சிறையில் இருந்து வெளியே வந்து செல்ல, 10 ஆயிரம் ரூபாய் கட்டணம் வசூலிக்கின்றனர்.
இவ்வாறு அதில் குறிப்பிட்டுள்ளனர்.
சமீபத்தில் மாண்டியா சிறையை டி.ஜி.பி., அலோக்குமாருடன், டி.ஐ.ஜி., திவ்யாஸ்ரீ ஆகியோர் ஆய்வு செய்தனர்.
அந்த பயணத்தின் போது, தங்களுக்கு அப்படிப்பட்ட எந்த கடிதமும் கிடைக்கவில்லை.
ஊடகங்களில் பரவி வரும் கடிதத்தின் அடிப்படையில், துறை ரீதியாக விசாரணை நடந்து வருவதாக, திவ்யாஸ்ரீ தெரிவித்தார்.
