ADDED : ஏப் 26, 2025 06:38 AM
வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் மாய மந்திரம், சூனியம் வைத்திருந்ததாக, அதை பார்த்தவங்க சொல்றாங்க. அதை வைத்தது யார். 'சிசிடிவி' கேமராவில் அந்த காட்சி பதிவாகி இருக்குமே. யார் அந்த சூனியக்காரர். எதற்காக இந்த வேலையை பார்த்தது என்ற பேச்சு எழுந்து உள்ளது.
யாருக்கு மிரட்டல் விடுத்திருக்காங்க என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே, அங்கு பெண் ஊழியர்களுக்கு பாதுகாப்பு இல்லை என்ற பேச்சு இன்னும் அடங்கல. தர்ம அடி வாங்கிய, அதிகாரி ஒருத்தர் இடமாற்றமும் செய்யப்பட்டார்.
எனவே சூனியம் வைத்திருப்பது பாலியல் தொடர்பான பிரச்னையா; சொத்து விவகாரமா என்ற கேள்விகள் நடமாட்டமா இருக்குது.
சூனிய சம்பவம் இரண்டு மூன்று நாட்களாக பலரை மிரள வைக்குது. சில ஊழியர்கள், இங்கு தங்களுக்கு வேலையே வேணாம்னு சொல்ல வெச்சிருக்கு.
இன்னும் கூட இதையும் நம்புகிற மூட நம்பிக்கை உள்ளவங்க இருக்காங்களே. இதுக்கு பரிகார பூஜை நடத்தலாமா என்று சிலரு யோசிக்கிறாங்களாம்.
கோல்டு சிட்டி 'தாலுகா' தகுதி பெறுவதற்கு முன்னதாகவே, இங்கு தீயணைப்பு நிலையத்தை ஏற்படுத்தினாங்க. இந்த தீயணைப்பு நிலையம் உருவான 20 வருஷத்துல, தீயணைப்புக்கென நீர் நிரப்பின வாகனமே இல்லாத அவலம் இப்போது தான் ஏற்பட்டிருக்குது.
உயிரற்ற உடல் போல தீயணைப்பு நிலையம் இருந்து வருகிறது. கோடை வெப்பத்தை தணித்துக் கொள்ள, தீயணைப்பு வீரர்களுக்கு ஓய்வறையாக தான் பயன்படுகிறதோ.
இப்படியே தொடர்ந்தால், யாருமே கண்டுக்காம போனால், அந்த தீயணைப்பு நிலையமே தேவையில்லை என்று அதற்கும் மூடுவிழா நடத்தினாலும் ஆச்சரியமில்லை. கோல்டு சிட்டிக்கு இதென்ன என்ன சாபக்கேடு
நுாற்றாண்டு பழமை வாய்ந்த ஐந்து விளக்கு பகுதியில், ஆறு சாலைகள் பிரியும் சதுக்கத்தில், முனிசி., நிர்வாகம் சலவைக் கற்களால் 'ஐ லவ் கே.ஜி.எப்.,' என்று வாசகம் அமைத்து இருக்காங்க. இதனை சிவப்பு, நீல வண்ணத்தில் உருவாக்கி இருக்காங்க.
இதன் திறப்பு விழா அசெம்பிளி மேடம் பிறந்த நாளில் நடத்த திட்டமிட்டிருந்தாங்களாம். ஆனால், கை காரங்களோட மூவர்ணத்தில் பச்சையை மறந்து நீலம் சேர்த்திருப்பதால், மேடம் விசிறிகள் யோசிக்கிறாங்க.
நீலத்தை நீக்கி பச்சையை மாற்ற வேணும்னு சிலர் விரும்புறாங்களாம். ஓரிரு நாள் மட்டுமே சோதனைக்காக மின்னொளியில் ஒளிர வைத்த 'ஐ லவ்' மூடப்பட்டு விட்டதாம். இந்த விவகாரத்தில் இப்படியொரு பிரச்னையா. இதன் திறப்பு விழாவின் போது நீலம், நீலமாக தொடருமா அல்லது பச்சை வண்ணமாக மாற்றப்படுமா என்ற எதிர்ப்பார்ப்பு எழுந்து உள்ளது.

