ADDED : ஜன 28, 2026 06:42 AM
எதுக்கு வந்தார் ஆபீசரு?
கோ ல்டன் சிட்டியில், அரசுக்கு சொந்தமான தொற்று நோய் மருத்துவமனை ஒன்று இருப்பதே, மருத்துவ துறைக்கு தெரியுமா என்பதே சந்தேகமாக உள்ளது. 25 படுக்கைகளுடன், 24 மணி நேரமும் இயங்குகிற இந்த மருத்துவமனையை, பிளேக், பெரியம்மை, காலரா பாதிப்பு ஏற்பட்ட போது, 10 ஏக்கரில் அமைச்சாங்க. இந்த மருத்துவமனையின் காம்பவுண்ட் சுவர் நொறுங்கி விழுந்து பல ஆண்டுகளாகி விட்டது. அதனால், மருத்துவமனை வளாகத்தில், மாடுகள், ஆடுகள், பாம்புகள் உல்லாசமாக திரிகின்றன; ஓய்வெடுக்கின்றன.
மருத்துவ துறைக்கு பல, 'சி' செலவு செய்வதாக மாநில அரசு கணக்கு சொல்லுது. ஆனால், இந்த, 24 மணி நேர மருத்துவமனையில் யார் மருத்துவர்; எப்போ வருவார்; டியூட்டி நேரம் என்ன என்று கேட்டால், யாருக்குமே தெரியாது என்கிறாங்க. மருத்துவமனையை ஆய்வு செய்ய வந்த மாநில அளவிலான அதிகாரிக்கு, மருத்துவமனையின் அவலம் பற்றி எடுத்துச் சொல்லவும் ஆளையே காணோம்.
ஆனாலும், வந்த ஆபீசருக்கு பெரிய சால்வையும், பழக்கூடையும் கொடுத்து உபசரித்து அனுப்பி வெச்சிட்டாங்க. அவரென்ன குறை தீர்க்க வந்தாரா; கவுரவ பாராட்டை ஏற்க வந்தாரான்னு தெரியல.
மாநகராட்சி மலரனுமாம்!
கோ ல்டன் சிட்டியில் இருக்கும், 'குடா'வை உடைச்சி பங்காருபேட்டைக்கென தனியா, 'புடா' வையும் உருவாக்கியதை சாதனையா சொல்றாங்க. 'குடா'வையே, மாநகராட்சியா தரம் உயர்த்திடனும்னு மாநிலத்தோட முதல் சி.எம்., குடும்பத்துக்காரரு ஒருத்தரு, குரல் கொடுத்திருக்காரு. இது, அவரோட கனவு. ஆனால், அசெம்பிளிக்கு போற மேடம் மனசில இடம் கிடைக்க வேணாமா. ஏற்கனவே, 20 ஆண்டுகளில் குடா தலைவரா பதவியில் இருந்தவங்க, என்ன பெருசா மேம்படுத்தினாங்கன்னு ஊரே கேட்குது.
நில ஆக்கிரமிப்புகளை கட்டுப் படுத்தினாங்களா; இருக்கும் அரசு சொத்துக்களை காப்பாற்றினாங்களா; புதுசா ஏதாச்சும்,'லே -அவுட்' ஏற்படுத்தினாங்களா. எதையுமே காணோம்.
கைகாரங்களே கவுதம் நகரில், குடா அனுமதி பெறாமலே அடுக்கு மாடி உருவாக்குவதா சொல்றாங்க. கைக்காரங்களா இருந்தா, எல்லா முறைகேடும் செய்துக்கலாமான்னு குடா-வை குடையிறாங்க. ஆசையை வெறுக்க சொன்ன, கவுதமர் பெயரில் உள்ள நகரில் அளவுக்கு மீறி முறைகேடு செய்றாங்களாமே நிஜமாவா.
சோதனை மேல் சோதனை
க டைசியாக ஆஜர் பட்டியலில் இருந்த மைனிங் தொழிலாளிகள், இன்னும் நிலுவைத்தொகை வட்டியுடன் வரனும்னு காத்திருக்கிறாங்க. இவங்களோட வழக்கில், உயர் கோர்ட்டு
சிங்கிள் பெஞ்சில் சாதகமாக தீர்ப்பு கிடைச்சது . வக்கீலுக்கு பாராட்டுக்கள் குவிஞ்சுது.
மைன்ஸ் நிர்வாகமோ மேல் முறையீடு போனாங்க. அங்கு நிலை தலைகீழாக மாறி விட்டது. அதனால, 'சோதனை மேல் சோதனை'யென பாட்டு படிச்சு தொழிலாளிகள் புலம்பிக்கிட்டு இருக்காங்களாம்.
பல கோடி கமிஷன்?
பொ ன் விளைந்த நகரில் தொழிற்பூங்கா ஏற்படுத்த, 673 ஏக்கர் நிலத்தை சித்து அரசு கையகப்படுத்திச்சு. விரைவில் பல தொழிற்சாலைகள் உருவாகப்போகுதென நம்பிக்கையும் வந்திருக்குது. எந்தெந்த கம்பெனிகள் வரப்போகுது என்ற எதிர்ப்பார்ப்பு ஒருபக்கம் இருக்க, பல மல்டி மில்லினியர்கள் ஏற்கனவே பார்க்க வேண்டியவங்கள பார்த்து நிலத்தை வாங்கிட, 'புக்கிங்' ஆகி விட்டதாம். இதில் பல பல 'சி'க்கள் சில மந்திரிகள் வசம் போய் சேர்ந்திடுச்சாம்.
அந்த தகவல் வெளியே கசியாமல் காதோடு காது வெச்சு பேசி முடிச்சிட் டாங்களாம். குறைந்த பட்சம், 500 கம்பெனிகள் வரப்போவது நிஜம் தானாம். இதனால், 'மெகா கமிஷன்' கைமாறியதாக பேசிக்கிறாங்க. இந்த ஆண்டுக்குள் உள் கட்டமைப்பு எல்லாம் தயாராகி விடும். அதற்கான வரைப்படங்கள் வெளி வந்துவிட்டதாக தெரியிது.

