ஒரே உறையில் இரண்டு கத்திங்க போல, கோல்டு சிட்டியில் காக்கிகளின் குடியிருப்புக்கான இடமாக இருந்த இடத்தை, தொழிற் மேம்பாட்டுத் துறைக்கு சொந்தமானதென பெயர் பலகை வெச்சிருக்காங்க. இது ஒரு அரசுக்கு உட்பட்ட இரு துறைகளின் தகராறு. பேசி தீர்த்துக் கொள்வதாக சொல்றாங்க. இங்கு யார் விட்டுக் கொடுத்தாலும், யாருக்கும் இழப்பல்ல.
அரசே தொழிற்சாலை அமைக்க நிலம் ஒதுக்கினால் சர்ச்சையே இருக்காது. ஆனால், தொழிற் மேம்பாட்டு துறை, தனியாருக்கு நிலம் விற்கும் முயற்சி என்ற சந்தேகம் எழுந்துள்ளது. காதில் பூ சுற்றும் வேலை நடப்பதாக, விபரம் அறிந்த வங்க விமர்சிக்கிறாங்க. இத்தோடு பெமல் நிர்வாகம் உருவாக்கின சுற்றுச் சூழல் பூங்காவையே நாசப் படுத்தி சுகாதாரத்தை சீரழிக்கும் வேலையையும் செய்யலாமான்னு கேள்விங்க எழுந்துள்ளதே.
மா.குப்பம், ரா.கேம்ப் பகுதியில், மனைகள் தயாராகுது. வீடற்றவங்களுக்கு இலவசமா வீடு கட்டி கொடுக்கப்போறாங்களாம். பயனாளிகள் யார் என்பதை குலுக்கல் முறையில் தேர்வு செய்வாங்களாம்.
இதற்காக மொத்தம் 8,000 விண்ணப்ப படிவங்க குவிந்ததாக சொன்னாங்க. வார்டு தோறும் 200 க்கும் குறையாமல் உள்ளதாம். இதனை பரிசீலித்த அதிகாரிங்க, 2,000 ஐ மட்டுமே ஏற்றுக் கொண்டாங்களாம்; மற்றவைகளை ஒதுக்கிட்டாங்களாம்.
வீடுங்க வழங்கும் திட்டத்தில், யாருக்கெல்லாம் என்பதை அசெம்பிளி தேர்தலை கருத்தில் கொண்டு, தீர்மானித்து உள்ளதாக ஒரு தரப்பினர் கூறுகின்றனர். இதனால கைக்கு கிடைத்த வரப்பிரசாதம் என்கிறாங்க. மற்றவங்க ஏமாற வேண்டியது தானா?
ஒரு காலத்தில கவுதமர் பெயரில் உள்ள நகரில் பெரிய ஏரி இருந்ததாக சொல்றாங்க. அந்த ஏரி நிலத்தை, பல மனைகளாக அளந்து தின்னுட்டாங்களாம். மாயமான ஏரியை 12 ஆண்டுகளாக தேடி வர்ராங்க. பல ஆபீசர்களுக்கு புகார்களும் போயிருக்கு.
இதில் புதுசா லே - அவுட் ஏற்படுத்தினவங்க கூட, ஏரி நிலத்தை ஆக்ரமித்துக் கொண்டதாக ரீல் ஓடிக் கொண்டிருக்குது. முறைகேடாக ஆக்ரமிப்பு செய்த நிலத்தை வட்டாட்சியர் மீட்க போவதாக தெரிவித்திருக்காரு.
ஆக்ரமிப்பு செய்துள்ளதாக கூறப்படுகிற இடத்தின் ஆவணங்களை ஆய்வு செய்த ஊழல் ஒழிப்புப்படை ஆபீசர்கள், இம்மாதம் இறுதிக்குள் ஆக்ரமிப்புகளை மீட்க போவதாக உறுதி அளிச்சிருக்காங்க.
இப்போதாவது அரசு நிலம் காப்பாற்றப்படுமா அல்லது கிணற்றில் விழுந்த கல்லாக கிடக்குமா என புகார் செஞ்சவங்க காத்திருக்காங்க.
கோல்டு நகரில் நிலம் சுருட்டும் கும்பல்களின் அட்டகாசம், எல்லையை மீறி போய்க்கொண்டிருக்கிறதாம்.
நில பட்டா தயாரிக்கிற கூட்டம் பற்றி பரவலாக தெரிந்தும், இதுவரை அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுத்ததாக தெரியல. வி.ஐ.பி., போர்வையில் உள்ளவங்களே 'பிக்பாஸ்கள்' என தெரிய வந்துள்ளது. இதனால் சட்டம், இவர்கள் பக்கம் இருப்பதாக நெனப்பு இருக்குது. இதனால போலி பட்டாவில் மனைகள் விற்பதே சிலருக்கு தொழிலாக மாறியிருக்குதாம்.
ஒரு சாம்பிளாக, குப்பை கிடங்குக்கு ஒதுக்கிய நிலத்தில் கூட, பல ஏக்கர் மனைகளாகி விட்டன. ராணுவ வீரர்களுக்கு ஒதுக்கின மனைகளையும் காணவில்லை என அவங்க தேடுறாங்க. இவங்க முனிசி., க்கு நடையா நடந்து, நடந்து கால்கள் தேய்ந்தது தான் மிச்சம்.

