தேசப் பிதா மார்க்கெட் மேற்கு பகுதியில், டிரான்ஸ்பார்மரை இடமாற்றம் செய்து, அந்த இடத்தில் சாலைக்கு வழி ஏற்படுத்த போறாங்களாம். முனிசி.,யின் இந்த திட்டத்துக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. இது நல்ல திட்டம் தான்னு வரவேற்றாலும், சிலர் உள்நோக்கத்துடன் எதிர்ப்பும் காட்டுறாங்க.
அதே மார்க்கெட் நுழைவு வாயில் பகுதியில், இருந்த சிறுநீர் கழிப்பறை காணாமல் போனது. அந்த இடத்தில் கடைகள் உருவானது. அதுபோல டிரான்ஸ்பார்மர் இடம் கூட 'டிரான்ஸ்பர்' ஆகிடுமான்னு கேட்கிறாங்க.
ஆனால், சுய நலனுக்காக டிரான்ஸ்பார்மரை இடம் மாற்றம் செய்யல; பொது மக்கள் நலனுக்காகவே என பதில் வருது. சிலர் உசுப்பேத்தி குழப்பம் ஏற்படுத்துவதாக சந்தைக்குள் சலசலப்பு எழுந்து உள்ளது.
எம்.ஜி.மார்க்கெட் இறைச்சி பகுதியின் சாலையில் வடிகால் கட்டப் பட்டுள்ளது. ஆனால், அந்த சாலைக்கு தான் விடிவு பிறக்கல. சிமென்ட் சாலை போடாததால் சேறும், சகதியுமாக காணப்படுது. முனிசி., பல லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்தும், பணிகள் தாமதம். இதனால், சேற்றில் நடந்து செல்லும் நிலையே நீடிக்குது.
பணிகளை விரைந்து முடிக்கணுமுன்னு பொறுப்பானவங்க 'கீ' கொடுக்க வேண்டும் அல்லது ஒப்பந்ததாரர்களை மாற்ற வேண்டும். பிளாக் லிஸ்ட்டில் சேர்க்க வேண்டும். இதனால, முனிசிக்கு தான் கெட்ட பேரு.
தொற்று நோய் மருத்துவமனை மீது மாவட்ட, மாநில மருத்துவத்துறை கவனம் செலுத்துவதே இல்லை. இதன் காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பல வருஷம் ஆச்சு. ஆடு, மாடு, தெருநாய்கள் உல்லாசமாக நடமாடவும் தங்கும் இடமாகவும் மாறியிருக்குது. 25 படுக்கைகள் உள்ள 24×7 மருத்துவமனை. ஆனால் அப்படி இருப்பதாக தெரியல. மருத்துவமனை பெயர் பலகையும் எங்கே என தேடவேண்டும். விசாலமான காலி இடத்தில் நடப்பட்ட புங்கை மரம் மட்டுமே கொளுத்தும் வெயிலில் இளைப்பாறிட உதவியாக இருக்குது. சிலருக்கு திறந்த வெளி கழிப்பறையாகி விட்டது. சட்ட விரோத கும்பல்களுக்கு தங்கும் இருப்பிடமாக மாறியதாகவும் சுற்றுப் புற ஜனங்க அச்சத்தில் இருக்காங்க.
ஆசையை அறவே ஒழிக்க புறப்பட்ட கவுதமரின் பெயரில் உள்ள நகரில், முனிசி.,க்கு சொந்தமான நிலத்தை தனியார் பள்ளி ஒன்று ஆக்கிரமிப்பு செய்தது. காம்பவுண்ட் அமைத்து தங்களுக்கு சொந்தமானதாக ஆக்கிக் கொண்டதாக அப்பகுதியினர் சொல்றாங்க.
ஒருமுறைக்கு இருமுறை ஆக்கிரமிப்பை முனிசி.,காரங்க இடித்து தள்ளினாங்க. ஆனால், எப்படி கட்டடம் கட்ட அனுமதி கொடுத்தாங்க.
பல கோடி மதிப்புள்ள முனிசி., நிலம், தனியார் பள்ளிக்கு சொந்தமாக்க, எந்தெந்த வி.ஐ.பி.,களுக்கு எவ்வளவு கை மாறியது. சுத்தம், சுகாதாரம் உள்ள இடம் கோல்டு சிட்டியில் வேறெங்கும் இருக்காது என்று கூறுப்படுகிறது. ஆனால் நிலம் முறைகேடு நடந்ததை எப்படி சகித்துக் கொள்கின்றனரோ.