*காற்றில் கலந்த உத்தரவு
முனிசி.,க்கு சொந்தமானது தனியார் பஸ் நிலையம். இங்குள்ள பஸ் நிலையத்தின் வடகிழக்கு பகுதியின் நுழைவு வாயிலின் பெயர் பலகை அழிந்து 20 ஆண்டுகள் கடந்தாச்சு. ஆனாலும் அதன் பெயரை மீண்டும் எழுதவே இல்லை.
இதன் பெயரை பலகையில் எழுத பணம் இல்லையா; எழுதுவதற்கு பெயின்டர் இல்லையா. வெளியிடத்தில் இருந்து ஆள் வரணுமா. என்னதான் பிரச்னை.
கழிப்பறைக்கான இடத்திலெல்லாம் கடைகள் கட்டிக் கொள்ள தலையசைத்த முனிசி., பொது நோக்கத்திற்கான பெயரை, பலகையில் ஏன் எழுதல.
அதே பஸ் நிலைய நுழைவு வாயில் பகுதியில், பில் கலெக்டர் ஆபீஸ் இருந்ததே அது எங்கே காணாமல் போனது. தனியாரின் கடையாக மாறிடுச்சோ.
பஸ் நிலையத்தில் பஸ்களை தவிர வேறு எந்த ஒரு வாகனத்துக்கும் அனுமதி இல்லைன்னு சொன்னாங்க. மீறி உள்ளே நுழைந்தால் அபராதம் வசூலிப்பதாக அறிவிச்சாங்க. சொல்ற உத்தரவாதம் காற்றோடு போயாச்சு.
***
*உடைந்த ஒற்றுமை
கோல்டு சிட்டியில் இருக்கிற கனரக தொழிற்சாலையில் தற்காலிக ஊழியர்களை பணி நிரந்தரம் ஆக்கணும், ஊதிய உயர்வும் கேட்டு 26 நாட்கள் வேலை நிறுத்தம் செஞ்சாங்க. ஆனா, முடிவே தெரியாம முடித்து கொண்ட போராட்டத்தாலே, உறுதியாக இருந்த அவங்களோட ஒற்றுமையும் உடைந்து போனது.
புதன் கிழமை நடந்த போராட்டத்துல 380 பேர் ஆதரவு தராம வேலைக்கு போனாங்க. ஆயினும் மிகப் பெரிய போராட்டம் நடத்துவதாக நுழைவு வாயிலில் பேசி தாகத்தை தணித்து கொண்டாங்க. வேலைக்கு சென்றவங்கள தாறுமாறாக பேசினாங்களாம்.
இதனால் மோதலுக்கு வழியாகி காக்கிகளிடம் புகாரும் போயிருக்கு. யாரையும் நம்பி பிரயோஜனமே இல்லை என்பதே பெரும்பாலான தற்காலிக ஊழியர்களின் குரலாக கேட்கிறது.
***
*எதுக்காக பதவிகள்
முனிசி.,யின் தற்போதைய கவுன்சிலின் ஆயுள் இன்னும் மூன்றே மாதம் தான். அடுத்து பொது தேர்தலை கவுன்சிலர்கள் சந்தித்தாக வேண்டும்.
முனிசி., கவுன்சிலுக்கு தலைவரை தேர்வு செய்ய 20 எல்., 25 எல்., என ஏலம் போட்ட காலமெல்லாம் போய், முழு அதிகாரமும் கை கட்சி அசெம்பிளிகாரரின் கட்டுப் பாட்டுல உள்ளது.
அப்படியும் முதல் தலைவருக்கு சில 'சி' செலவாச்சுன்னு சொல்றாங்க. இரண்டாம் கட்ட தலைவருக்கு பல 'எல்' கப்பம் கட்டினாங்க என்கிறாங்க. ஆனால் அதன் உறுப்பினர்கள் சிலருக்கு மட்டுமே, சில 'எல்' மட்டுமே பட்டுவாடா ஆனதாக சொல்றாங்க.
முதல் தலைவரு காலத்துல, குமுறல் கொட்டியதால் அவங்கள சமாதானப்படுத்த அழுற பிள்ளைக்கு வாழைப்பழம் கொடுத்தாப்ல ஒரு நிலைக்குழு தந்து படம் எடுத்து ஆடாமல் 'பெட்டி'யை வைத்து அடக்கிட்டாங்களாம். அடுத்த தேர்தலில் இவங்க எல்லாம் போட்டிக்கு வருவாங்களா. பல லட்சங்களை தண்ணீரா செலவழிப்பாங்களான்னு இப்பவே கால்குலேஷன் போட துவங்கி இருக்காங்க.
வார்டுகளில் புதியவங்க பணம், மூட்டை அரிசி, சேலைகள் வழங்கி வராங்க. பலரும் கிடைச்சவரை லாபம்னு நினைக்கிறாங்க.
**
*அழியும் படலம்
அறுபது ஆண்டுக்கு முன்னாடி, 'பிளேக்' தொற்று நோய் பலரின் உயிரை பறித்தது. அப்போ இந்த நோய் தடுப்புக்காக மாநிலத்துல மூன்று நகரத்துல, தொற்று நோய் சிகிச்சை மருத்துவமனையை ஏற்படுத்தினாங்க. தங்கவயல் மருத்துவமனை குட்டிச்சுவரா மாறியிருக்கு. ஒரு பேஷன்ட்டும் அட்மிட் ஆகிற மாதிரி தெரியலை. அவுட் பேஷன்ட் நோயாளிகளை காண்பதும் அரிதாக உள்ளது. ஆடுமாடுகள், தெருநாய்கள், பன்றிகள் பாம்புகள் விஷ ஜந்துக்களின் இருப்பிடமாக மாறியிருக்கு.
மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் உடைந்து உள்ளது. பல கோடி ரூபாய் செலவழிப்பதாக அரசு செலவு கணக்கு காட்டப்படுகிறது.
இந்த மருத்துவமனைக்காக எவ்ளோ செலவழிக்கிறாங்க என்ற விபரம் வெளிப்படையா தெரிவிக்கல. இதன் பேரில் 'லுாப்' லைனில் முறைகேடு நடப்பதாக விபரம் தெரிஞ்சவங்க சொல்றாங்க.
இதில் பலருக்கு பங்கு இருக்குதாம். பங்கு வாங்குறவங்க கூட அழிந்து வரும் மருத்துவ மனையை காப்பாற்ற யோசிக்கலயே .