தமிழை காணோம்!
க லபுரகி ரயில் நிலையத்தில் கன்னடம், ஆங்கிலம், ஹிந்தி, உருது மொழிகளில் பெயர் பலகை உள்ளது. கலபுரகி, கர்நாடகாவில் தான் இருக்குது. இங்கு உருது பேசுகிற மக்கள் 60 சதவீதத்துக்கும் அதிகமாக இருக்கிறாங்களாம். இதே போல் தான் கோல்டு சிட்டியில் 80 சதவீதம் பேர் தமிழர்கள் உள்ளனர். இங்குள்ள ரயில் நிலையங்களில் இருந்த தமிழ் எழுத்துகளை அழிச்சிட்டாங்க.
அண்மையில் ஐந்து விளக்கு பகுதியில் 'ஐ லவ் கேஜிஎப்' பெயர் பலகை கூட இரு மொழிகளில் மட்டுமே இருக்குது. இங்கு 100 சதவீதம் தமிழர்கள் தான் இருக்காங்க. ஆனால் தமிழை வேணாம்னு ஏன் தவிர்க்குறாங்களோ. உள்ளூரில் 60 சதவீதம் பேர் பேசும் மொழிக்கு முன்னுரிமை அளிக்க சட்டத்தில் இடம் இருந்தும், ஒரு சிலரின் குறுகிய ஆசைக்கு தமிழை பலியிடுறாங்களே.
இதே போல் ஹென்றீஸ் குடியிருப்பு பகுதியில் தமிழரின்றி வேறு மொழியினர் இல்லவே இல்லை. இங்கு 100 சதவீதம் தமிழர் இருந்தும், தமிழில் பெயர் பலகையை வைப்பதை தமிழரே கவுரவ குறைவாக நினைக்கலாமா.
காக்கிகளுக்கே சவால்!
த ங்கவயல் மாவட்ட காக்கியின் உயர்வான பெரிய ஆபீசரின் பெயரில் இன்ஸ்டாகிராமில் போலிகணக்கு ஆரம்பித்திருக்காங்களாம். இவரோட கணக்குடன் தொடர்பில் இருக்கிறவங்கள எச்சரிக்கைப்படுத்துறாங்க. போலி கணக்கை ஏற்படுத்தினது யார்? அந்த நபரை கண்டுப் பிடிக்க வேணும்.
இதனை கண்டறிவதற்காகவே இருக்கிற தகவல் தொழில்நுட்ப நுண்ணறிவை பயன்படுத்தி ஆரம்பத்திலேயே வேரறுக்க ஆபரேஷனை செய்து 'சக்சஸ்' ஆக்க வேண்டும்.
இந்த மாதிரி வேலைகளை படிப்பறிவு இல்லாதவங்க செய்கிற வேலையா இருக்காது. படிச்ச அறிவாளிகளே இத்தகைய வேலைகளை பாக்குறதா தெரியுது.
இன்ஸ்டாகிராமை துவக்கினவங்க, வேறென்னவெல்லாம் செய்வாங்களோ. காக்கிகளுக்கே சவாலா?
வரலாற்றை மறைக்கலாமா?
ம ண் வாரி கனரக பேக்டரியை கோல்டு சிட்டியில் ஏற்படுத்த காரணமாக இருந்தது யாருன்னு விபரம் அறிந்து பேச வேண்டுமே. யாரையோ போற்றி புகழ வேண்டும் என்பதற்காக உண்மையை மூடி மறைக்க வரலாற்றை குழி தோண்டி புதைக்கலாமா?
மாநிலத்தில் 'வெண்மை புரட்சி'யை ஏற்படுத்தியவர், ஒவ்வொரு நந்தினி பால் பார்லரில் படமாக பூஜிக்கப்படுகிற கோபால 'கிருஷ்ண' பரமாத்மா பெயர் கொண்டவர் பெயரை உச்சரித்தால் தப்பாகி விடுமா.
அவர் தலைமையில் உள்ளூரு லீடர்களுடன் தமிழகத்து கிங் மேக்கர் முதல்வரை சந்தித்து, அங்கு உருவாக இருந்த, இந்த கனரக பேக்டரியை கோல்டு சிட்டியில் அமைக்க செய்ததை மறைக்கலாமா.
கிங் மேக்கர் தேசிய பெருந்தலைவராக இருந்தாரே அதாவது தெரியுமா, இல்லையா.
கை கட்சியில் அரசியல் தெரிந்தவர்கள், உண்மை அறிந்தவர்கள் யாரேனும் ஒருத்தர் இருப்பாரேயானால் அந்த நபர் மண் வாரி எந்திர தொழிற்சாலை வரலாற்றை அசெம்பிளிகாரருக்கு பாடம் நடத்த வேணும்.
காலியாக உள்ள நிலத்தை கண்டுப்பிடித்து, அதை கையகப் படுத்த சொன்னவரை கூட அசெம்பிளிக்காரர் மறந்தார் போல தெரியுது. அந்த தொழிற்சங்க தலைவரையாவது மதித்து உண்மையை கேட்டு தெரிஞ்சிக்கலாமே.