சட்டம் துாங்கலாமா?
மு னிசி., தேர்தல் நெருங்கும் நேரமிது. ஓட்டுப்போடுபவர்களை 'உஷார்' படுத்த, வார்டுகளில் போட்டியிட ஆர்வம் உள்ளவர்கள் நடமாடுறாங்க.
இட ஒதுக்கீடு என்ன வரப்போகுதோ என காத்திருக்காங்க. எது வந்தாலும் சந்திக்க தயார் என்று பலவிதமான போலி ஜாதி சான்றிதழ்களையும் கையில் வைத்திருப்பவங்களும் இருக்காங்களாம்.
எதுவாக இருந்தாலும் தேர்தல் முடிந்த பிறகு தான், நீதிமன்றம் எது ஒரிஜினல் என்று முடிவு செய்கிறதாம். அதுவரை எல்லாவற்றையும் அனுபவிக்கலாமென சிலர் காத்திருக்காங்களாம்.
ஒருவர், போலி சான்றிதழில் தனித் தொகுதியில் போட்டியிட்டு எம்.எல்.ஏ., ஆகி, ஐந்தாண்டை நிறைவு செய்தாரு. பின்னர் தான், அவர் ஜாதி தனித் தொகுதிக்கு ஏற்ற பட்டியல் ஜாதி இல்லையென நீதிமன்றத்தில் தீர்ப்பானது.
ஆனால், அந்த ஐந்தாண்டு பதவிக்காலத்தில் அவர் பெற்ற வசதி, வாய்ப்பு, வருமானம் கவுரவம் என்னானது.
ஒவ்வொரு ஆண்டும் கோல்டு சிட்டியில் கூட போலி ஜாதி சான்றிதழ் மூலம் தேர்தலில் போட்டியிடுவது வழக்கமாக இருக்குதாம். இதனை தடுக்க சட்டம் துாங்கலாமா.
விசிறிக்கு வாய்ப்பு
கோ ல்டன் சிட்டியில் மூன்று மாதங்களாக 'குடா' சேர்மன் பதவி யாருக்கு என பலர் காத்திருந்தாங்க. சீனியர்கள் சிலர் தங்களின் காட் பாதர்களை அணுகி வாய்ப்புக் கேட்டாங்க. ஆனால், சீனியர்களை விட லோக்கல் அசெம்பிளி மேடத்தின் விசுவாசிக்கு தான் 'யோகம்' அடிச்சிருக்கு.
சிட்டிக்குள் ரா.கா., லே- - அவுட் தவிர வேறு ஒரு 'குடா' லே - அவுட் உருவாகவே இல்லை. பெயருக்கு இந்த நிலம் 'குடா' பிராப்ரட்டின்னு அடையாள பலகை வைத்திருப்பதை மட்டுமே காண முடிகிறதே தவிர, குடா நகரம் உருவாக்கப்படவில்லை.
புதிய தொழிற்பேட்டை, தொழில் நகரம், உருவாகும் காலமிது. இந்த குடா அனுமதி இல்லாமல் ஒரு ஸ்டெப் வேலையும் அதில் நடக்காது. இது கோல்டு சிட்டி மறு மலர்ச்சிக்கு 'பவர்புல்' சந்தர்ப்பமாம்.
அசெம்பிளிகாரரின் சாதனைக்கு குடா தான் 'பச்சை சமிக்ஞை' காட்ட வேணும். அதனால் தான் தேவைக்கேற்ப அவரின் விசிறியான விசுவாசிக்கு வாய்ப்பு கிடைச்சதா சொல்றாங்க. வாய்ப்பு கிடைக்காதவங்க மாத்தி யோசிக்க தொடங்கிட்டாங்க.
தங்க முட்டையிடும் வாத்து?
இ னி உள்ளூருகாரர்கள் வி.சவுதாவில் அங்கம் வகிக்க வாய்ப்பு ரொம்போ கம்மி. 20 வருஷமா லோக்கல் காரங்க வாய்ப்பை இழந்ததால் அந்த பதவி மேலே வெறுப்பு ஏற்பட்டு சீ...சீ... இந்த பழம் புளிக்கிறது என்ற கதையா போச்சு.
அசெம்பிளிக்கு பல கோடிகளை செலவழிக்கிற எலக் ஷனாக மாறியாச்சு. பழைய லீடர்கள் ஒதுங்க பாக்குறாங்க.
புதுசா வெளியூரின் தங்க முட்டையிடும் வாத்துக்காக 'கோல்டு சிட்டி' பாலிடிக்ஸ் காத்திருக்குது. அரசியல் மூலம் பதவிகளை அனுபவிச்ச வங்களுக்கு அட்லீஸ்ட் முனிசி., பதவியாவது கிடைக்காதான்னு பிளான் பண்ணி ஹோம் ஒர்க் செய்ய தொடங்கிட்டாங்க.
உள்ளூரை ஆட்டி படைக்கும் வெளியூர் அரசியல் அதிகார ஏஜென்டிடம் இருந்து காப்பாற்ற பெரிய கூட்டணி ஏற்பட போகுது. கை காரர்களை தவிர்த்து மத்தவங்க ஒண்ணு கூடி சீட்ஷேரிங் செய்துக்க போறாங்களாம்.
அதற்கான ஆட்டம் தொடங்கிட்டாங்க. அசெம்பிளிகாருடன் அதிருப்தியில் உள்ள கை காரர்களும் கூட இந்த கூட்டணியில் சேருறாங்க.
யார் கண்டுக்க போறாங்க...?
ப ஸ் நிலையம் உட்பட முக்கிய இடங்களில் எல்லாம் ஸ்டீல் குப்பைத் தொட்டிகளை முனிசி.,காரங்க ஏற்படுத்தினாங்க. அவை எங்கே போனது. காயலான் கடைக்கு விற்றாங்களா அல்லது திருடுப் போனதா.
பல லட்சம் செலவழித்து நடைபாதைக்கு அமைக்கப்பட்ட 'ஸ்டீல் தடுப்பு' கீழே விழுந்து பல மாதமாகியும், இன்னும் கவனிப்பாரற்று கிடக்குது. இதை யார் சொந்தம் ஆக்கிக்க போறாங்களோ.
பல லட்சம் ரூபாய் செலவழித்து தேசப் பிதா சிலையை சுற்றி காம்பவுண்ட் சுவர் அமைச்சாங்க. ஏதோ ஒரு வாகனம் மோதி சுவரின் ஒரு பகுதி கீழே விழுந்து பல மாதங்கள் ஆகியும் கண்டுக்கொள்ள ஆளே இல்லை.
நகரின் தொற்று நோய் மருத்துவமனை காம்பவுண்ட் சுவர் இடிந்து விழுந்து பல வருஷம் ஆகிறது. இதற்குரிய வார்டில் இருக்கிறவங்க பார்வையில் இது படலையா... தேர்தலுக்கு போட்டியிட ஆசைப்படுறவங்க பொது பிரச்னையில் கவனம் செலுத்தலாமே.

