/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு
/
கர்நாடகா உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி பதவியேற்பு
ADDED : ஜூலை 19, 2025 10:58 PM

பெங்களூரு: கர்நாடக உயர் நீதிமன்றத்தின் 35வது தலைமை நீதிபதியாக விபு பக்ரு நேற்று பதவியேற்றார்.
கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்த நிலே விபின்சந்திரா அஞ்சாரியா, இந்தாண்டு மே மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டார். அதை தொடர்ந்து, பொறுப்பு நீதிபதியாக காமேஸ்வர் ராவ் செயல்பட்டு வந்தார்.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற 'கொலிஜியம்' பரிந்துரையின்படி, கர்நாடக உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக விபு பக்ரு நியமிக்கப்பட்டார்.
பெங்களூரு ராஜ்பவனில் உள்ள கண்ணாடி மாளிகையில் நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், விபு பக்ருவுக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
நிகழ்ச்சியில் மேல்சபை தலைவர் பசவராஜ் ஹொரட்டி, முதல்வர் சித்தராமையா, துணை முதல்வர் சிவகுமார் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கு பின், கர்நாடக உயர் நீதிமன்றத்தில் உள்ள மாநில வக்கீல்கள் சங்கத்தில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில், விபு பக்ரு பேசியதாவது:
இந்திய அரசியலமைப்புக்கு விசுவாசமாக இருப்பதுடன், நம் மதம், சட்டம், மக்களின் நம்பிக்கையை நிலை நிறுத்துவதும் நம் கடமை. பெங்களூரு வக்கீல்கள் சங்கம், அதன் தொழில்முறை, நெறிமுறைகளை பின்பற்றுகிறது. நீதித்துறையின் சுதந்திரத்தை பாதுகாக்கவும், பலப்படுத்தவும் பாடுபடுவேன்.
கர்நாடகா, அறிவுஜீவிகள், சட்ட வல்லுநர்கள், சீர்திருத்தவாதிகள் நிறைந்த மாநிலமாகும். பசவண்ணர் ஒரு நீதிமானாக, சமத்துவம், கண்ணியம், தார்மீக தைரியம் பற்றி போதித்தார். சர்.எம்.விஸ்வேஸ்வரய்யா, ஒழுக்கத்தின் முக்கியத்துவத்தை கற்பித்தார். சமூக நீதி, அரசியலமைப்பு விருப்பங்களுக்கான அம்பேத்கரின் அர்ப்பணிப்பு, நமக்கு ஒரு கலங்கரை விளக்கமாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.

