/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
பா.ஜ.,வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக முதல்வர் புகார்
/
பா.ஜ.,வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக முதல்வர் புகார்
பா.ஜ.,வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக முதல்வர் புகார்
பா.ஜ.,வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக முதல்வர் புகார்
ADDED : செப் 03, 2025 09:57 AM

மைசூரு -: பா.ஜ.,வுக்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வருவதாக, முதல்வர் சித்தராமையா 'பகீர்' கிளப்பி உள்ளார்.
மைசூரில் நேற்று அவர் அளித்த பேட்டி:
தர்மஸ்தலா வழக்கில் என்.ஐ.ஏ., விசாரணை சிறப்பாக நடக்கிறது. பா.ஜ., தலைவர்கள் ஏன் என்.ஐ.ஏ., விசாரணை கேட்கின்றனர் என்று தெரியவில்லை. நம் காவல் துறை மீது அவர்களுக்கு நம்பிக்கை இல்லையா? எஸ்.ஐ.டி., அமைக்கும்போது, என்.ஐ.ஏ., விசாரணை கேட்கவில்லை. நேரத்திற்கு நேரம் மாற்றி மாற்றி பேசுகின்றனர்.
எஸ்.ஐ.டி., விசாரணையை, தர்மஸ்தலா கோவில் நிர்வாக அதிகாரி வீரேந்திர ஹெக்டே வரவேற்று உள்ளார். அவரது குடும்பத்தினர் மீதான களங்கத்தை நீக்க அவர் விரும்புகிறார். எஸ்.ஐ.டி., விசாரணையில் நாங்கள் யாருமே தலையிடவில்லை.
தர்மஸ்தலா வழக்கை அரசியலுக்காக பா.ஜ., பயன்படுத்த கூடாது. இந்த வழக்கிற்கு வெளிநாடுகளில் இருந்து பணம் வந்ததாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். பா.ஜ.,வுக்கும் வெளிநாடுகளில் இருந்து பணம் வருகிறது.
கல்லுாரி மாணவி சவுஜன்யா கொலை வழக்கை, சி.பி.ஐ., தான் விசாரித்தது. மீண்டும் விசாரணை நடத்த கோரி, உச்ச நீதிமன்றம் செல்ல போவதாக, பா.ஜ., தலைவர்கள் கூறுகின்றனர். சவுஜன்யா கொலையில் வீரேந்திர ஹெக்டே குடும்பத்தின் மீது சிலர் குற்றச்சாட்டு கூறுகின்றனர். வீரேந்திர ஹெக்டேவுக்கு ஆதரவு தெரிவித்துவிட்டு, சவுஜன்யா வீட்டிற்கு பா.ஜ., தலைவர்கள் சென்றது ஏன்? அவர்கள் யார் பக்கம் உள்ளனர்?
தர்மஸ்தலா வழக்கில் கைது செய்யப்பட்ட சின்னையாவை அழைத்து வந்ததே, காங்கிரஸ் தான் என்று எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகிறார். பா.ஜ., - எம்.எல்.ஏ., சுனில்குமார் வேறு விதமாக சொல்கிறார். உண்மைக்கு புறம்பான ஒன்றை பற்றி விவாதித்தால் இதுதான் நடக்கும்.
கடந்த 2017ல் தசராவை முஸ்லிம் சமூகத்தின் நிசார் அகமது துவக்கி வைத்தார். அப்போது பா.ஜ., தலைவர்கள் எங்கு சென்றனர்? பானு முஷ்டாக் சிறந்த எழுத்தாளர்; புக்கர் விருது வென்றவர். இதனால் தான் தசராவை துவக்கி வைக்க அவரை அழைத்தோம். இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, பா.ஜ., தலைவர்கள் அரசியல் செய்வது சரியல்ல.
இவ்வாறு அவர் கூறினார்.