/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஆர்.எஸ்.எஸ்., குறித்த முதல்வர் சர்ச்சை காங்., - பா.ஜ., கடும் வாக்குவாதம்
/
ஆர்.எஸ்.எஸ்., குறித்த முதல்வர் சர்ச்சை காங்., - பா.ஜ., கடும் வாக்குவாதம்
ஆர்.எஸ்.எஸ்., குறித்த முதல்வர் சர்ச்சை காங்., - பா.ஜ., கடும் வாக்குவாதம்
ஆர்.எஸ்.எஸ்., குறித்த முதல்வர் சர்ச்சை காங்., - பா.ஜ., கடும் வாக்குவாதம்
ADDED : மார் 18, 2025 05:17 AM

பெங்களூரு: “ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த சமூகத்தில் கலவரங்களை உருவாக்குபவர்கள், வெறுப்பை விதைப்பவர்கள்,” என, முதல்வர் சித்தராமையா கூறியதால், சட்டசபையில் காங்கிரஸ் - பா.ஜ., உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
கவர்னர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது, சட்டசபையில் முதல்வர் சித்தராமையா நேற்று பேசுகையில், ''முந்தைய பா.ஜ., அரசை விட மாநிலத்தில் சட்டம் - ஒழுங்கு தற்போது சீராக உள்ளது. குற்றம் செய்பவர்களை தண்டிக்கும் பணியை நாங்கள் திறம்பட செய்துள்ளோம்.
''75 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப் பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதற்காக நான் பாராட்டுகிறேன். குற்ற விகிதத்தை குறைப்பது எங்கள் நோக்கம். ஆனால் ஆர்.எஸ்.எஸ்., அமைப்பை சேர்ந்தவர்கள் இந்த சமூகத்தில் கலவரத்தை உருவாக்குகின்றனர். வெறுப்பை விதைக்கின்றனர்,'' என்றார்.
இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.
எதிர்க்கட்சித் தலைவர் அசோக் பேசுகையில், ''நாங்கள் எல்லாம் ஆர்.எஸ்.எஸ்.,காரர்கள். பிரதமர் நரேந்திர மோடி, உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகிய அனைவரும் ஆர்.எஸ்.எஸ்., தான்.
நீங்கள் பி.எப்.ஐ., அமைப்பின் ஏஜன்ட். தடை செய்யப்பட்ட அமைப்புகளின் உறுப்பினர்கள் மீதான வழக்கை வாபஸ் பெற்றவர் நீங்கள். முதல்வரின் அறிக்கையை சபை குறிப்பில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் சபை நடவடிக்கையை தொடர அனுமதிக்க மாட்டோம்,'' என்றார்.
இதற்கு காங்கிரஸ் உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்தால், ஆளுங்கட்சி - பா.ஜ., உறுப்பினர்கள் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது.
அப்போது குறுக்கிட்ட சித்தராமையா, ''சட்டசபையில் பிரச்னை செய்யும்படி உங்களிடம் கூறியது யார் என்று எங்களுக்கு தெரியும்.
''நீங்கள் என்ன செய்தாலும் நாங்கள் பதிலடி கொடுப்போம். என் கருத்தை வாபஸ் பெற மாட்டேன்,'' என்றார்.
புகைப்படம்
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப் உடன், பிரதமர் மோடி எடுத்துக் கொண்ட புகைப்படத்தை, அமைச்சர் பிரியங்க் கார்கே சட்டசபையில் காண்பித்தார். “உங்கள் பிரதமர் எதற்காக பாகிஸ்தான் சென்றார்?” என, ஆவேசமாக கேள்வி எழுப்பினார்.
இதற்கு பா.ஜ., உறுப்பினர்கள் பதிலடி கொடுத்து கூறுகையில், 'நாடுகள் தொடர்பான பிரச்னை குறித்து விவாதிக்க சென்றார். உங்களை போன்று பயங்கரவாத நடவடிக்கைகளை ஊக்குவிக்க செல்லவில்லை' என்றனர்.
இதனால் கோபம் அடைந்த பிரியங்க் கார்கே, ''பா.ஜ., தலைவர்கள், தங்கள் பிள்ளைகளை ஆர்.எஸ்.எஸ்., அமைப்பில் சேர விடமாட்டார்கள். ஆனால் கட்சி தொண்டர்களின் குழந்தைகளை சேர்க்கும்படி கூறுவர்,'' என்றார்.
ஜெய்ஸ்ரீராம்
அப்போது குறுக்கிட்ட பா.ஜ., உறுப்பினர் சுனில்குமார், ''உங்கள் குழந்தைகளில் எத்தனை பேர் தலித் காலனியில் இருக்கின்றனர்?'' என்றனர்.
கோபம் அடைந்த சித்தராமையா, ''தலித் குழந்தைகள் தலித் காலனியில் தான் இருக்க வேண்டுமா? அவர்கள் முன்னுக்கு வர கூடாதா?'' என்றார்.
'காங்கிரஸ் நாட்டின் துரோகி, ஆர்.எஸ்.எஸ்., ஜிந்தாபாத், காங்கிரஸ் பாகிஸ்தான் ஏஜன்ட், ஜெய்ஸ்ரீராம்' என, பா.ஜ., உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். இதனால் சபையில் கூச்சல், குழப்பம் நீடித்தது.
'யார் என்ன பேசுகின்றனர்' என்பது கேட்கவில்லை. இதையடுத்து சபாநாயகர் இருக்கையில் அமர்ந்திருந்த காங்கிரசின் சிவலிங்க கவுடா, சபையை 10 நிமிடங்கள் ஒத்திவைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு நக்கல், நையாண்டியுடன் முதல்வர் சித்தராமையா பதிலளித்தார். அவரது பேச்சை கேட்டு, அதிகாரிகளும் சிரித்தனர்.