வறட்சி குறித்து ஆய்வு செய்கிறேன் முதல்வர் சிவகுமார் தகவல்
வறட்சி குறித்து ஆய்வு செய்கிறேன் முதல்வர் சிவகுமார் தகவல்
ADDED : ஜூலை 25, 2026 11:34 PM

சித்ரதுர்கா: அலமாட்டி அணை பகுதியை தவிர, வேறு எந்த பகுதிகளிலும், நல்ல மழை பெய்யவில்லை. எனினும், எங்கும் குடிநீருக்கு பற்றாக்குறை ஏற்படாமல் பார்த்து கொள்கிறோம், என, முதல்வர் சிவகுமார் தெரிவித்தார்.
சித்ரதுர்காவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
வறட்சி தொடர்பாக, பெங்களூரில் ஆலோசனை நடத்துவதை விட, சித்ரதுர்காவில் நடத்தலாம் என்பதற்காக, இங்கு வந்துள்ளேன். ஏற்கனவே மாவட்ட கலெக்டர்கள், சி.இ.ஒ.,க்களுடன் ஆலோசனை கூட்டம் நடத்தினேன்.
தற்போது துமகூரு, ஷிவமொக்கா, சித்ரதுர்கா, தாவணகெரே அனுகூலமாகும் வகையில், திட்டம் வகுக்கிறோம்.
பல்வேறு இடங்களுக்கு சென்று, சூழ்நிலையை நேரில் ஆய்வு செய்தேன். பெலகாவியில் நடந்த ஆலோசனை கூட்டத்தில், எந்த இடத்திலும் குடிநீருக்கு பாதிப்பு வரக்கூடாது என, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டேன்.
அலமாட்டி அணைப்பகுதியை தவிர, வேறு எங்கும் நல்ல மழை பெய்யவில்லை. மாநிலத்தில் வறட்சி தொடர்ந்து அதிகரிக்கிறது. வறட்சி குறித்து அதிகாரிகளிடம் தகவல் கேட்டறிந்தேன்.
நாளை மறைந்த அமைச்சர் சுதாகர் நினைவு நிகழ்ச்சி நடக்கவுள்ளது. நாளையும் சித்ரதுர்காவுக்கு வருவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
மக்கள் பிரதிநிதிகளுடனும், அவர் ஆலோசனை நடத்தினார்.
