அதிகாரிகளிடம் முதல்வர் சிவகுமார் கண்டிப்பு!: அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது
அதிகாரிகளிடம் முதல்வர் சிவகுமார் கண்டிப்பு!: அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாது
UPDATED : ஜூன் 05, 2026 05:14 AM
ADDED : ஜூன் 04, 2026 11:10 PM

கர்நாடக முதல்வராக சிவகுமார் பதவியேற்ற பின், ஐ.ஏ.எஸ்., - ஐ.பி.எஸ்., அதிகாரிகளுடனான முதல் ஆலோசனை கூட்டம் நேற்று பெங்களூரு விதான் சவுதாவில் நடந்தது.
கூட்டத்தில் முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
எங்கள் பணி, இன்று முதலே துவங்கிவிட்டது. அரசு, எந்தவொரு ஜாதிக்கோ, மதத்துக்கோ ஆதரவாக இல்லை. மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து அதிகாரிகள் செயல்பட வேண்டும்.
நேர்மையாக பணியாற்ற வேண்டும். 15 நாட்களுக்குள் ஒரு செயல்திட்டம் தொடர்பாக அறிக்கை அளிக்க வேண்டும். நிர்வாகத்தில் உள்ள அனைவரும் பொறுப்புகளை உணர்ந்து செயல்படுங்கள்.
அதிகாரிகளுக்கு அடிப்படை பொது அறிவு தேவை. எனக்கு வரலாற்றை படிக்கவோ, எழுதவோ பிடிக்காது. நாம் வரலாற்றை உருவாக்கி, முத்திரை பதிக்க வேண்டும். பொறுப்பானவர்களான நீங்கள், மனசாட்சிப்படி செயல்படுங்கள்.
அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்களின் அழுத்தத்துக்கும் அடிபணியாமல், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும். சட்டத்தின் வரம்புக்குள் செயல்படுங்கள். ஊழலற்ற நிர்வாகத்திற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர்., பணி நாடு முழுதும் எஸ்.ஐ.ஆர்., எனும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த பணியை தேர்தல் ஆணையம் மேற்கொண்டு உள்ளது. கேரள மாநிலம் உட்பட பல மாநிலங்களில் இப்பணி ஏற்கனவே நிறைவடைந்து உள்ளது.
இம்மாதம், கர்நாடகாவில் துவங்க உள்ளது. பொது மக்களை தவறாக வழிநடத்தாமல், எஸ்.ஐ.ஆர்., மிகவும் வெளிப்படையான முறையில் நடத்தப்பட வேண்டும். இது குறித்து அனைத்து வாக்காளர்களிடமும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எந்தவொரு குடிமகனும் தனது விலைமதிப்பற்ற வாக்களிக்கும் உரிமையை இழக்கக்கூடாது.
மற்ற மாநிலங்களில் மேற்கொண்ட, எஸ்.ஐ.ஆர்., பணிகளால், லட்சக்கணக்கான மக்கள், தங்கள் வாக்குரிமையை இழந்துள்ளனர். ஆனால், கேரளாவில், இந்த செயல்முறை வெற்றிகரமாக அமைந்து உள்ளது.
உதவி மையம் நம் மாநிலத்திலும் வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரும் விடுபடாமல் அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும். இதற்கென ஒரு தனி அதிகாரிகளின் குழு நியமிக்க வேண்டும்.
பொது மக்களுக்கு உதவுவதற்காக, தேவைப்படும் இடங்களில் உடனடியாக 'உதவி மையங்கள்' அமைக்கப்பட வேண்டும். கேரளாவை போலவே, இந்த செயல்முறை நம் மாநிலத்திலும் மிகவும் வெற்றிகரமாக அமைய வேண்டும். வாக்காளர் பட்டியலில் இருந்து யாருடைய பெயரையும் விட்டு விடாமல், அதிகாரிகள் கவனமாக இருக்க வேண்டும்.
எஸ்.ஐ.ஆர்.,ல் யாரும் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழக்கக்கூடாது. இந்த செயல்பாட்டில் அவர்கள் தங்கள் பெயர்களை பதிவு செய்யாவிட்டால், தங்களின் சிறப்பு உரிமைகளை இழப்பார்கள்.
முதல்வர், துணை முதல்வர் உட்பட அனைவரும் வாக்காளர்களே. கணக்கெடுப்பு விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, கையொப்பமிட்டு, ஆவணங்களுடன் சமர்ப்பிக்க வேண்டும். அவ்வாறு செய்யாவிட்டால், அவர்கள் தங்களது வாக்களிக்கும் உரிமையை இழப்பர் என்பது குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். இதற்கு, தேவையான ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
என்.ஐ.ஆர்.,க்கு தனி அமைச்சகம் கூட்டத்துக்கு பின், முதல்வர் கூறியதாவது:
வெளிநாடுகளில் வசிக்கும் கன்னடர்களுக்கென, 'வெளிநாடு வாழ் இந்தியர்கள்' அமைச்சகத்தை அமைக்க, அதிகாரிகளுக்கு உத்தரவிட்டு உள்ளேன். வெளிப்படையான, நியாயமான ஆட்சியை வழங்க, எந்தவொரு அழுத்தத்துக்கும், அடிபணிய வேண்டாம் என்று அதிகாரிகளுக்கும், அமைச்சர்களுக்கும் அறிவுறுத்தி உள்ளேன்.
அனைத்து துறைகளும், 15 நாட்களுக்குள் அறிக்கை சமர்ப்பிக்க அறிவுறுத்தி உள்ளேன். வேலை வாய்ப்பு உருவாக்குவது குறித்து அறிக்கையும் கேட்டுள்ளேன். தனியார் நிறுவனங்கள், பிறருக்கு வசதியளிக்கும் வகையில் வேலை வாய்ப்பு பரிமாற்ற மையம் அமைக்கப்படும்.
தேர்தல்கள் எங்களுக்கு முக்கியமல்ல. மக்களின் வாழ்க்கை தரமே முக்கியம் என்று நாங்கள் கருதுகிறோம். எனவே, வாக்குறுதிகள் மூலம், குறைந்தபட்சம் ஒரு பாதுகாப்பான வாழ்க்கையாவது வழங்க விரும்புகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
வடக்கு நோக்கி... முன்னாள் முதல்வர் சித்தராமையாவுக்கு வாஸ்து சாஸ்திரம் போன்றவற்றில் நம்பிக்கை இல்லாதவர். பெங்களூரு விதான் சவுதாவில் அதிகாரிகளுடன் கிழக்கு திசையில் அமர்ந்து, ஆலோசனை கூட்டம் நடத்துவார்.
வாஸ்து சாஸ்திரத்தில் நம்பிக்கை உள்ள புதிய முதல்வராக பதவியேற்ற சிவகுமார், விதான் சவுதாவின் வடக்கு நுழைவு வாயில் வழியாக உள்ளே வந்தார். முதல் அமைச்சரவை கூட்டத்தின் போது, வழக்கம் போல, கிழக்கு திசையை நோக்கி இருக்கை இருந்தது. அங்கு வந்த சிவகுமார், இருக்கையை வடக்கு நோக்கி போடும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
அப்போது ஊடகத்தினர், 'கேரமாக்களை வைத்துவிட்டோம். இனி மாற்ற தாமதமாகும்' என்றனர். இதை ஏற்றுக் கொண்ட சிவகுமார், நாளை முதல் தனது இருக்கையை வடக்கு நோக்கிய திசையில் வைக்கும்படி உத்தரவிட்டிருந்தார்.
அதன்படி, நேற்று அதிகாரிகளுடனான கூட்டத்தில், வடக்கு திசையை நோக்கி அமைக்கப்பட்டிருந்த இருக்கையில் அமர்ந்து கூட்டம் நடத்தினார்.
