/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
கல்வி முக்கியத்துவம் விழிப்புணர்வு முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்
/
கல்வி முக்கியத்துவம் விழிப்புணர்வு முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்
கல்வி முக்கியத்துவம் விழிப்புணர்வு முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்
கல்வி முக்கியத்துவம் விழிப்புணர்வு முதல்வர் சித்தராமையா வலியுறுத்தல்
ADDED : செப் 05, 2025 11:06 PM

பெங்களூரு: ''கல்வி என்பது வெறும் பானையை நிரப்புவது மட்டுமல்ல; கல்வியின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்தகைய கல்வி வழங்குவது தான் எங்கள் அரசின் குறிக்கோள்,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
பெங்களூரு விதான் சவுதா மாநாட்டு அரங்கில் நேற்று நடந்த ஆசிரியர் தின விழாவை, முதல்வர் சித்தராமையா துவக்கி வைத்தார். அதை தொடர்ந்து மாநில விருது பெற்ற ஆசிரியர்கள் கவுரவிக்கப்பட்டனர்.
பின், அவர் பேசியதாவது:
ராஜப்பா ஆசிரியரிடம் பள்ளிக் கல்வியையும், பேராசிரியர் நஞ்சுண்டசாமியிடம் இருந்து அரசியல் பாடங்களையும் கற்றுக் கொண்டவன். கல்வி என்பது வெறும் பானையை நிரப்புவது போன்றதல்ல; கல்வியின் நோக்கம், முக்கியத்துவம் குறித்து குழந்தைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அத்தகைய கல்வி தான், எங்கள் அரசின் குறிக்கோளாகும்.
அரசியலமைப்பு சட்டம், நம் அனைவருக்கும் கட்டாய கல்வி உரிமையை வழங்கி உள்ளது. எனவே, ஆட்சிக்கு வந்தது முதல், அரசியலமைப்பின் முகவுரையை நடைமுறைபடுத்த செயல்பட்டு வருகிறது.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் ஆகியவையே அரசியலமைப்பின் மதிப்புகளாகும். இதை வாழ்க்கையில் செயல்படுத்தினால், சமூகத்தில் மனிதநேயம் கொண்ட உயர்ந்த குடிமக்களை உருவாக்க முடியும். இதை புரிந்து கொண்ட, நாகரீகமான சமூகத்தை உருவாக்க வேண்டும்.
ஜாதி அமைப்பை கொண்ட நம் சமூகம் மாற வேண்டும். மனிதாபிமான அமைப்பு உருவாக்கப்பட வேண்டும். கல்வி கற்கும்போதே, ஜாதி வெறியை பின்பற்றுவதும், அறியாமையை கடைபிடிப்பதும், கல்விக்கு செய்யும் துரோகமாகும்.
எனவே, பகுத்தறிவு, அறிவியல், பிற மதங்கள் மீதான சகிப்பு தன்மையை வளர்க்கும் கல்வியை வழங்குவது ஆசிரியர்களின் பொறுப்பாகும். பொறியியல் படித்தவர்களும் கூட, ஜாதியை கடைபிடித்து, அறியாமையை பின்பற்றுகின்றனர் என்றால், அவர்களுக்கு எத்தகைய கல்வி கிடைத்துள்ளது என்பதை உணர வேண்டும்.
ஜாதி அமைப்புகளால், சமத்துவமற்ற சமூகம் உருவாக்கப்பட்டு உள்ளது. அனைவருக்கும் வாய்ப்புகள் கிடைக்கவில்லை. சூத்திரர்களுடன் பெண்களுக்கும் கல்வி மறுக்கப்பட்டது. ஆனால், இப்போது கல்வியில் முன்னேறிய பெண்கள், பல உயர்ந்த இடங்களில் பொறுப்பில் உள்ளனர்.
டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் ஒரு ஆசிரியராகவும், உயர்ந்த தார்மீக மதிப்பு கொண்ட ஜனாதிபதியாகவும் இருந்தார். அவரது கொள்கையை பின்பற்றுவது தான், நாம் அவருக்கு செலுத்தும் உயர்ந்த மரியாதையாகும்.
இவ்வாறு அவர் பேசினார்.