/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
மழையால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் முதல்வர் சித்தராமையா மகிழ்ச்சி
/
மழையால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் முதல்வர் சித்தராமையா மகிழ்ச்சி
மழையால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் முதல்வர் சித்தராமையா மகிழ்ச்சி
மழையால் தமிழகத்துக்கு கூடுதல் தண்ணீர் முதல்வர் சித்தராமையா மகிழ்ச்சி
ADDED : செப் 15, 2025 05:48 AM

மாண்டியா : ''நடப்பாண்டு அதிக மழை பெய்ததால், தமிழகத்துக்கு கூடுதல் காவிரி நீர் சென்றுள்ளது. எனவே, கர்நாடகா மற்றும் தமிழகம் இடையிலான தண்ணீர் விவாதம் தவிர்க்கப்பட்டது,'' என, முதல்வர் சித்தராமையா தெரிவித்தார்.
மாண்டியாவில் நேற்று அவர் அளித்த பேட்டி:
மாண்டியா மாவட்டம், விவசாயத்தை பிரதானமாக கொண்டது. அதிக மழை பெய்தால் மட்டுமே, தமிழகத்துக்கு ஆண்டுக்கு 177.25 டி.எம்.சி., நீரை வழங்க வேண்டும் என, முடிவாகியுள்ளது.
நடப்பாண்டு அதிகமான மழை பெய்ததால், தமிழகத்துக்கு அதிகமான தண்ணீர் பாய்ந்து சென்றுள்ளது. எனவே கர்நாடகா, தமிழகம் இடையே காவிரி விவாதம் ஏற்படாது. மேகதாது திட்டத்துக்கு, தமிழகம் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கிறது என, புரியவில்லை.
அரசியல் நோக்கத்தால், இத்திட்டத்துக்கு ஆட்சேபனை தெரிவிக்கின்றனர். கர்நாடகா, இதுவரை 98 டி.எம்,சி., நீரை தமிழகத்துக்கு திறந்து விட வேண்டும். ஆனால், இதுவரை 221 டி.எம்.சி., தண்ணீர் அம்மாநிலத்துக்கு சென்றுள்ளது. அதிகமான மழை பெய்தால், மேலும் தண்ணீர் திறந்து விடுவோம்.
அதிர்ஷ்டவசமாக இரண்டு ஆண்டாக, நல்ல மழை பெய்துள்ளது. மாநிலத்தின் அனைத்து அணைகளும் நிரம்பின; நடப்பாண்டு மின்சாரம் பற்றாக்குறை ஏற்படாது. நமக்கும், தமிழகத்துக்கும் காவிரி நீர் விஷயமாக விவாதமும் ஏற்படாது. சரியான நேரத்தில் மழை பெய்தால், எந்த பிரச்னையும் ஏற்படாது.
மேகதாது திட்டத்தை செயல்படுத்த, மத்திய அரசும், தமிழக அரசும் தடை செய்யக்கூடாது. மேகதாது அணை கட்டினால் 66 டி.எம்.சி., தண்ணீரை சேகரிக்க முடியும்.
இது இரண்டு மாநிலங்களுக்கும் உதவியாக இருக்கும். மழை பெய்யாத போது, தமிழகத்துக்கு தண்ணீர் திறக்க உதவியாக இருக்கும். அதிக மழை பெய்யும் போது சேகரிக்கலாம்.
ககனசுக்கி நீர்வீழ்ச்சி மேம்பாட்டுக்கு, 6 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. மக்கள் அமர இருக்கை வசதி செய்யப்பட்டுள்ளது. நீர் வீழ்ச்சியை காண மக்கள் வர வேண்டும். கடந்த மூன்று ஆண்டுகளில், 22 லட்சத்துக்கும் அதிகமான சுற்றுலா பயணியர் வந்துள்ளனர்.
சிவசமுத்ரா அணையில், 1902ல், ஆசியாவிலேயே முதன் முறையாக மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டது. கர்நாடகா இன்று மின் உற்பத்தியில் சிறந்து விளங்க, அஸ்திவாரமாக இருந்தது சிவசமுத்ரா.
தற்போது மாநிலத்துக்கு தேவையான அளவு மின்சாரம் உற்பத்தியாகிறது. விவசாயிகளுக்கும் பயன்படுகிறது.
மழையால் பயிர்களை இழந்தவர்கள், உயிரிழந்த குடும்பத்தினருக்கு மாவட்ட நிர்வாகம், நிவாரணம் வழங்கியுள்ளது. சமீபத்தில் கலெக்டர் கூட்டம் நடத்தி, பயிர் சேதங்களை ஆய்வு செய்யும்படி உத்தரவிட்டுள்ளார்.
அறிக்கை அடிப்படையில், நிவாரணம் வழங்கப்படும். நிவாரணம் வழங்க, அரசிடம் பணம் பற்றாக்குறை ஏதும் இல்லை. வாக்குறுதி திட்டங்களால், அரசிடம் பணம் இல்லை. வளர்ச்சி பணிகள் நடப்பது இல்லை என, பா.ஜ.,வினர் பொய்யான குற்றச்சாட்டு சுமத்துகின்றனர்.
வாக்குறுதி திட்டங்களுக்காக, இதுவரை 99,000 கோடி ரூபாய் செலவிடப்பட்டது. விரைவில் இது 1 லட்சம் கோடி ரூபாயாக அதிகரிக்கும். வளர்ச்சி பணிகள் மற்றும் வாக்குறுதி திட்டங்களுக்கு, தேவையான நிதி அரசிடம் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.