/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
ஜனாதிபதி, நிதி அமைச்சருடன் முதல்வர் சித்தராமையா சந்திப்பு
/
ஜனாதிபதி, நிதி அமைச்சருடன் முதல்வர் சித்தராமையா சந்திப்பு
ஜனாதிபதி, நிதி அமைச்சருடன் முதல்வர் சித்தராமையா சந்திப்பு
ஜனாதிபதி, நிதி அமைச்சருடன் முதல்வர் சித்தராமையா சந்திப்பு
ADDED : ஜூன் 25, 2025 08:54 AM

புதுடில்லி : டில்லி சென்ற முதல்வர் சித்தராமையா, ஜனாதிபதி திரவுபதி முர்மு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்துப் பேசினார்.
கர்நாடக முதல்வர் சித்தராமையா இரண்டு நாட்கள் பயணமாக நேற்று டில்லி சென்றார். ஜனாதிபதி திரவுபதி முர்முவை ராஷ்ட்ரபதி பவனில் சந்தித்தார். அமைச்சர்கள் மஹாதேவப்பா, ஜார்ஜ், சதீஷ் ஜார்கிஹோளி, அரசின் தலைமை செயலர் ஷாலினி ஆகியோர் உடன் இருந்தனர்.
“கர்நாடக கவர்னர் தாவர்சந்த் கெலாட் அனுப்பி வைத்த நான்கு மசோதாக்களுக்கு, விரைவில் ஒப்புதல் அளிக்க வேண்டும்,” என, ஜனாதிபதி திரவுபதி முர்முவிடம், முதல்வர் சித்தராமையா வலியுறுத்தினார்.
அதன் பின், மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை, கர்நாடக நிதித்துறை அதிகாரிகளுடன் சென்று முதல்வர் சித்தராமையா சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
அப்போது, “15வது நிதி ஆணையத்தின் கீழ் வரி பங்கீட்டில், கர்நாடகாவின் பங்கு 4.713 சதவீதத்தில் இருந்து 3.647 சதவீதமாக குறைந்துள்ளது. இதனால் 16வது நிதி ஆணையம் மூலம், மாநிலங்களுக்கு இடையிலான, வரி பங்கீட்டில் ஆதரவான அணுகுமுறையை மத்திய அரசு கடைப்பிடிக்க வேண்டும்,” என, நிதி அமைச்சரை முதல்வர் கேட்டுக் கொண்டார்.
“சிறப்பு மானியம் உட்பட, கர்நாடகாவுக்கு ஒதுக்க வேண்டிய 80,000 கோடி ரூபாயை ஒதுக்க வேண்டும்,” என்றும் முதல்வர் கோரிக்கை வைத்தார்.
பின், முதல்வர் சித்தராமையா கூறுகையில், ''ஜனாதிபதியை சந்தித்து, நிலுவையில் உள்ள நான்கு மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக் கொண்டேன். என் அலுவலகத்தில் எந்த கோப்பும் இல்லை. சம்பந்தப்பட்ட துறைகளிடம் உள்ளது என, ஜனாதிபதி கூறினார்.
''மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனை சந்தித்து, வரி பங்கீட்டில் கர்நாடகாவுக்கு நடந்த அநீதி; மாநிலத்திற்கு ஒதுக்க வேண்டிய நிதிகள் பற்றியும் எடுத்துக் கூறினேன்,'' என்றார்.