/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
தனது பலத்தை நிரூபிக்க முதல்வர் சித்தராமையா... வியூகம்!; டில்லியில் 3 நாள் முகாமிட்டு முக்கிய ஆலோசனை
/
தனது பலத்தை நிரூபிக்க முதல்வர் சித்தராமையா... வியூகம்!; டில்லியில் 3 நாள் முகாமிட்டு முக்கிய ஆலோசனை
தனது பலத்தை நிரூபிக்க முதல்வர் சித்தராமையா... வியூகம்!; டில்லியில் 3 நாள் முகாமிட்டு முக்கிய ஆலோசனை
தனது பலத்தை நிரூபிக்க முதல்வர் சித்தராமையா... வியூகம்!; டில்லியில் 3 நாள் முகாமிட்டு முக்கிய ஆலோசனை
ADDED : நவ 10, 2025 04:16 AM

கர்நாடகாவில் நடக்கும் காங்கிரஸ் ஆட்சியில் முதல்வர் மாற்றம் தொடர்பான பேச்சு, இன்று, நேற்று இல்லை... 2023ல் காங்கிரஸ் ஆட்சிக்கு வந்ததில் இருந்தே பேசுபொருளாக உள்ளது. ஆளுக்கு இரண்டரை ஆண்டுகள் பதவி என்று, சித்தராமையா, சிவகுமார் இடையில் கட்சி மேலிடம் ஒப்பந்தம் போட்டதாகவும் தகவல் வெளியானது. ஆனால், அதுபற்றி உறுதியான தகவல் இல்லை.
மேலிட ஒப்பந்தம் உண்மை என்றால், வரும் 20ம் தேதியுடன் சித்தராமையாவிடம் இருந்து முதல்வர் பதவி பறிக்கப்படும். சித்தராமையாவுக்கு பின், சிவகுமார் முதல்வராக கூடாது என்பதில், காங்கிரசில் உள்ள மூத்த அமைச்சர்கள் சிலர் குறியாக உள்ளனர்.
குறிப்பாக எஸ்.சி., சமூகத்தை சேர்ந்த அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், தங்கள் சமூகத்திற்கு முதல்வர் பதவி கொடுக்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கின்றனர்.
அமைச்சர்கள் இந்த பரபரப்பான அரசியல் சூழ்நிலைக்கு மத்தியில், சிவகுமார் இரண்டு நாட்களுக்கு முன்பு டில்லி சென்று வந்தார். 'மேலிடம் நினைக்கும் வரை, சித்தராமையா முதல்வர் பதவியில் இருக்கட்டும்' என்று கூறி, தனது அதிருப்தியை வெளிப்படுத்தினார். ஆனாலும் திரைமறைவில் அடுத்த முதல்வராக அனைத்து வேலைகளையும் அவர் செய்கிறார்.
வரும் 20ம் தேதிக்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், மூன்று நாட்கள் பயணமாக வரும் 15ம் தேதி, சித்தராமையா டில்லி செல்கிறார். மூத்த வக்கீல் கபில் சிபில் எழுதிய புத் தக வெளியீட்டு விழாவில் பங்கேற்கிறார். மறுநாள் மேலிட தலைவர்களை சந்தித்து, அமைச்சரவை மாற்றம் குறித்தும் விவாதிக்க உள்ளார்.
அன்றைய தினம் இரவு, டில்லியில் உள்ள கொப்பால் காங்கிரஸ் எம்.பி., ராஜசேகர் ஹிட்னால் வீட்டில், இரவு விருந்தில் கலந்து கொள்கிறார். இந்த விருந்தில் சித்தராமையாவின் ஆதரவு அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள், எம்.பி.,க்களும் கலந்து கொள்கின்றனர்.
மீண்டும் பயணம் விருந்தின் போது முதல்வர் பதவி மாற்றம் குறித்து விவாதம் நடக்க உள்ளது. கட்சி மேலிடத்திடம், 'சித்தராமையாவே ஐந்து ஆண்டுகளும் முதல்வராக இருக்கட்டும் என்று எடுத்து கூறி அழுத்தம் கொடுங்கள்' என்று, தனது ஆதரவாளர்களிடம், சித்தராமையா கூற திட்டமிட்டுள்ளார். அவரது பேச்சை கேட்டு, மூத்த அமைச்சர்களும், கட்சி மேலிட தலைவர்களிடம் சென்று பேச வாய்ப்பு உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க, தனது ஆதரவாளர்களை அழைத்து சென்று, சோனியா, ராகுலை, சித்தராமையா சந்தித்து பேசவும் அதிக வாய்ப்பு இருக்கிறது. தனது பலத்தை காட்டவும் அவர் வியூகங்களை வகுத்து உள்ளார்.
கடந்த 2023 தேர்தல் முடிந்த பின்னரும், இதேபோன்று தனது ஆதரவாளர்களை டில்லிக்கு அழைத்து சென்று, மேலிடத்திற்கு அழுத்தம் கொடுத்து, முதல்வர் பதவியை சித்து வாங்கியதும் குறிப்பிடத்தக்கது. மீண்டும் ஆதரவாளர்களுடன், அவர் டில்லிக்கு பயணம் செய்வது, கர்நாடக அரசியலில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சித்தராமையாவின் அனைத்து நகர்வுகளையும் உன்னிப்பாக கவனிக்கும் சிவகுமார், அடுத்த அடியை எப்படி எடுத்து வைக்கலாம் என்று, தனது ஆதரவாளர்களுடன் கண்டிப்பாக ஆலோசனை நடத்துவார். இதனால் வரும் நாட்களில் கர்நாடக அரசியலில் பரபரப்புக்கு எந்த பஞ்சமும் இருக்காது என்பது தெளிவாகி உள்ளது.

