கியோனிக்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் சிவகுமார் பாராட்டு
கியோனிக்ஸ் நிறுவனத்திற்கு முதல்வர் சிவகுமார் பாராட்டு
ADDED : செப் 23, 2026 02:51 AM

பெங்களூரு: ''கிராமப்புற குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தை வழங்கி, வருங்கால சந்ததியினரை தயார்படுத்துகிறது,'' என, கியோனிக்ஸ் நிறுவனத்திற்கு, முதல்வர் சிவ குமார் பாராட்டு தெரிவித்துள்ளார்.
'கியோனிக்ஸ்' எனும் கர்நாடக மாநில மின்னணு மேம்பாட்டு கழகத்தின், 50வது ஆண்டு நிறுவன நாள், பெங்களூரில் தனியார் ஹோட்டலில் நேற்று நடந்தது. முதல்வர் சிவகுமார் பேசியதாவது:
கியோனிக்ஸ் நிறுவனத்திற்கு இது பொன்னான நாள். நான் பள்ளியில் படித்த போது கியோனிக்ஸ் துவங்கப்பட்டது. அப்போது தேவராஜ் அர்ஸ் முதல்வராக இருந்தார். வீரப்ப மொய்லி தொழில் துறை அமைச்சராக பணியாற்றினார். தேவராஜ் அர்ஸ் வகித்த முதல்வர் பதவியில் நான் இருப்பது எனக்கு கிடைத்த பாக்கியம்.
கியோனிக்ஸ் தயாரித்த கியோ கணினியை சமீபத்தில் அறிமுகப்படுத்தினேன். நாம் இப்போது செயற்கை நுண்ணறிவு யுகத்தில் நுழைந்துள்ளோம். கியோனிக்ஸ் புதிய சாத்தியகூறுகளை கண்டறிகிறது.
இதன் மூலம் கர்நாடகா எதிர்காலத்திற்கு தயாராகி வருகிறது. பெங்களூருக்கு அப்பால் ஷிவமொக்கா, கலபுரகி, மங்களூரில் தகவல் தொழில்நுட்பத்தை மேம்படுத்தும் திட்டம் அரசிடம் உள்ளது.
கியோனிக்ஸ் துவங்கிய போது பெங்களூரு மக்கள் தொகை 20 லட்சமாக இருந்தது. தற்போது, 1.40 கோடியாக உள்ளது. தொலைநோக்கு பார்வையுடன், தொழில்நுட்ப துறைக்கு தேவராஜ் அர்ஸ், வீரப்ப மொய்லி ஆகியோர் அப்போதே வலுவான அடித்தளம் அமைத்துள்ளனர்.
கியோனிக்ஸ் தலைவர் சரத் பச்சேகவுடா சிறப்பாக செயல்படுகிறார். கிராமப்புற குழந்தைகளுக்குத் தொழில்நுட்பத்தை வழங்கி, வருங்கால சந்ததியினரை தயார்படுத்தும் கியோனிக்ஸின் முயற்சிகள் வரவேற்கத்தக்கவை.
இவ்வாறு அவர் பேசினார்.
