'வந்தே மாதரம்' பாடல் விவகாரம் முதல்வருக்கு கவர்னர் கடிதம்
'வந்தே மாதரம்' பாடல் விவகாரம் முதல்வருக்கு கவர்னர் கடிதம்
ADDED : செப் 23, 2026 02:53 AM

பெங்களூரு: ''வந்தே மாதரம் பாடல் விவகாரத்தில், மாநில அரசு தன் முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்,'' என, முதல்வர் சிவகுமாருக்கு, கவர்னர் தாவர்சந்த் கெலாட் கடிதம் எழுதியுள்ளார்.
ஜனாதிபதி, பிரதமர், கவர்னர் பங்கேற்கும் நிகழ்ச்சிகளை தவிர, மற்ற அரசு நிகழ்ச்சிகளில் வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என கர்நாடக காங்கிரஸ் அரசு கடந்த 8ம் தேதி உத்தரவிட்டது.
நடைமுறை இதே நடைமுறை, நேற்று முன்தினம் நடந்த சட்டசபை சிறப்பு கூட்டத்தொடரில் கடைபிடிக்கப்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த பா.ஜ., - எம்.எல்.ஏ.,க்கள் முழு பாடலையும் பாடி முடித்தனர்.
இந்நிலையில், வந்தே மாதரம் விவகாரம் குறித்து, முதல்வர் சிவகுமாருக்கு கவர்னர் தாவர்சந்த் கெலாட் நேற்று கடிதம் எழுதினார். அதில் கூறப்பட்டுள்ளதாவது:
வந்தே மாதரம் பாடலில் முதல் இரண்டு பத்திகள் மட்டுமே பாடப்படும் என்ற மாநில அரசின் முடிவு தவறானது. இது சட்டத்தை மீறும் செயலாகும். மாநில அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும். இது தேசிய சின்னம் தொடர்பான விதிகளுக்கு சம்பந்தப்பட்ட விஷயம்.
வழிகாட்டுதல் இந்த விஷயத்தில் மத்திய அரசின் வழிகாட்டுதல்களை மாநில அரசு பின்பற்ற வேண்டும். தேசிய பாடலை ஒழுங்குபடுத்தும் அதிகாரம் மாநில அரசிடம் இல்லை. மத்திய அரசிடமே உள்ளது.
பார்லிமென்ட் சட்டங்களையும், மத்திய அரசின் உத்தரவுகளையும் மாநில அரசு பின்பற்ற வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.
