தலைமை செயலர் ஷாலினி மீது அமலாக்க துறையில் லஞ்ச புகார்
தலைமை செயலர் ஷாலினி மீது அமலாக்க துறையில் லஞ்ச புகார்
ADDED : பிப் 20, 2026 04:53 AM

பெங்களூரு: முடா முன்னாள் கமிஷனர் நடேஷின் பதவி உயர்வுக்காக, 1.60 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கியதாக, கர்நாடக தலைமை செயலர் மீது, அமலாக்கத்துறை மற்றும் வருமான வரி துறையிடம், மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா புகார் அளித்துள்ளார்.
கர்நாடக காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியத்தின், சி.இ.ஓ.,வாக பணியாற்றுபவர் நடேஷ். முடா எனும் மைசூரு நகர்ப்புற மேம்பாட்டு ஆணையத்தின் முன்னாள் கமிஷனராகவும் பணியாற்றினார்.
இவர் பதவியில் இருந்த போது, 50:50க்கு சதவீதத்தில், பயனாளிகளுக்கு வீட்டுமனை ஒதுக்கியதில் முறைகேடு நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இந்நிலையில், நடேஷ் தன் பதவி உயர்வுக்காக, மாநில தலைமை செயலர் ஷாலினிக்கு, 1.60 கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாக, மைசூரு சமூக ஆர்வலர் சிநேகமயி கிருஷ்ணா, கடந்த இரண்டு நாட்களுக்கு முன் பரபரப்பு குற்றச்சாட்டு கூறினார்.
நேற்று காலை பெங்களூரு வந்த அவர், அமலாக்கத்துறை, வருமான வரித்துறை அலுவலகங்களுக்கு சென்று, 1.60 கோடி ரூபாய் லஞ்சம் தொடர்பாக ஷாலினி மீது புகார் அளித்தார். பின், லஞ்ச பணத்தை எடுத்து சென்ற காரின் பதிவெண்ணையும் வெளியிட்டார்.
இதையடுத்து, சிநேகமயி கிருஷ்ணா அளித்த பேட்டி:
பதவி உயர்வுக்காக, முடா முன்னாள் கமிஷனர் நடேஷ், தலைமை செயலர் ஷாலினிக்கு, 1.60 கோடி லஞ்சம் கொடுத்தார் என்று நான் கூறியதற்கான ஆதாரமாக, பணம் எடுத்து செல்லப்பட்ட கார், அதன் பதிவெண்ணை வெளியிட்டு உள்ளேன்.
கடந்த, 9ம் தேதி மைசூருக்கு அந்த கார் வந்தது. எங்கிருந்து வந்தது என்று தெரியவில்லை. காருக்குள் ஐந்து பைகளில், 9 கோடி ரூபாய் பணம் இருந்தது. நடேஷின் பினாமியான நிகில், நான்கு பைகளில் இருந்த பணத்தை தனது வீட்டிற்கு எடுத்து சென்றார்.
இன்னொரு பினாமி ஜஸ்வந்த், ஒரு பையில் இருந்த 1.60 கோடி ரூபாயை எடுத்து சென்று, ஷாலினிக்கு கொடுத்து உள்ளார்.
மீதமுள்ள பணத்தின் நிலை என்ன என்று தெரியவில்லை. அன்றைய தினமே நான் போலீசில் புகார் அளித்தேன். என் மீது நடவடிக்கை இல்லை.
நான் கடுமையான குற்றச்சாட்டை முன்வைத்தும், தலைமை செயலர் விளக்கம் அளிக்கவில்லை. அவர் மீது அமலாக்க துறை, வருமான வரித்துறையில் புகார் செய்து உள்ளேன். ஏழு நாட்களுக்குள் அவர்குள் நடவடிக்கை எடுக்காவிட்டால் நீதிமன்றத்தை அணுகுவேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
