சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை 2வது முறையாக பாதிரியார் கைது
சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை 2வது முறையாக பாதிரியார் கைது
UPDATED : நவ 20, 2026 12:00 AM
ADDED : நவ 19, 2026 11:16 PM
மங்களூரு: சிறுவர்களுக்கு பாலியல் தொல்லை கொடுத்த பாதிரியார் மீது, இரண்டாவது முறையாக, ‘போக்சோ’ வழக்கு பதிவானது.
தட்சிணகன்னடா மாவட்டம், உல்லாள் அருகில் உள்ள பெர்மன்னுாரில் செயின்ட் செபாஸ்டியன் சர்ச் உள்ளது. இதில் சிப்ரியன் பின்டோ, 65, பாதிரியாராக பணியாற்றுகிறார்.
இவர் அங்கு பிரார்த்தனைக்கு வந்த 14 வயது சிறுவனுக்கு, பாலியல் தொல்லை கொடுத்தார். இது தொடர்பாக அவரை, அக்டோபர் 17ல் போலீசார் கைது செய்தனர்.
அவர், ஜாமின் கோரி நீதிமன்றத்தை நாடினார். நீதிமன்றமும் நிபந்தனை ஜாமின் அளித்ததால், அக்டோபர் 29ம் தேதியன்று விடுவிக்கப்பட்டார்.
இதற்கிடையே சிப்ரியன் பின்டோ, வெலன்சியாவில் உள்ள சர்ச்சில் இருந்தபோதும், 14 வயது சிறுவனுக்கு சாக்லேட் ஆசை காண்பித்து, தன் அறைக்கு அழைத்துச் சென்று, பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.
தொடர்ந்து அடுத்தடுத்த வாரங்களில் பிரார்த்தனைக்குச் சென்ற போதும், இதேபோன்று நடந்து கொண்டார்.
இந்த விஷயத்தை சிறுவன், தன் நண்பர்களிடம் கூறினார். அதன்பின் பெற்றோருக்குத் தெரிய வந்து, நவம்பர் 8ம் தேதி மங்களூரின் மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
இதய பிரச்னைக்கு சிகிச்சை பெற்று, நேற்று முன்தினம் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட சிப்ரியன் பின்டோவை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். அவரை டிசம்பர் 2 வரை, சிறையில் அடைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
