/
உள்ளூர் செய்திகள்
/
பெங்களூரு
/
காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுக்கும் சிறார்கள்
/
காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுக்கும் சிறார்கள்
ADDED : அக் 30, 2025 04:38 AM

மைசூரு:  தசரா பொருட்காட்சி மைதானத்தில், சில நாட்களாக காந்தி வேடமணிந்து சிறார்கள் பிச்சை எடுப்பதை பார்த்து, பொது மக்கள் வருத்தம் அடைந்துள்ளனர்.
மைசூரு நகரின், தசரா பொருட்காட்சி மைதானத்தில், பல்வேறு வெளி மாவட்டங்கள், மாநிலங்களை சேர்ந்தவர்கள், விளையாட்டு பொம்மைகள், உடைகள், வீட்டு அலங்கார பொருட்கள், பேனாக்கள் என, பல விதமான பொருட்களை கொண்டு விற்பனை செய்கின்றனர். பெரும்பாலும் மஹாராஷ்டிரா மாநிலத்தவர்கள் அதிக எண்ணிக்கையில் வருகின்றனர்.
இரண்டு வாரங்களாக சிறுவர், சிறுமியர் சிலர் பொருட்கள் விற்பதை விட்டு, காந்தி வேடம் அணிந்து பிச்சை எடுக்கின்றனர்.
வெள்ளை வேட்டி உடுத்தி, கண்களில் கண்ணாடி அணிந்து, கையில் கோலுடன், கிண்ணத்தை ஏந்தி பிச்சை எடுக்கின்றனர். அதிகம் பணம் கிடைப்பதால், காந்தி வேடத்தை போடுவதாக சிறார்கள் கூறுகின்றனர்.
இதற்கு முன்பு இவர்கள் பேனா, பலுான்களை விற்றனர். இவற்றை வாங்கும்படி சுற்றுலா பயணியரிடம் நச்சரிப்பதால், பொருட்காட்சி பாதுகாப்பு ஊழியர்கள், சிறுவர், சிறுமியரை அங்கிருந்து வெளியேற்றினர்.
எனவே வியாபாரத்தை விட்டு, காந்தி வேடம் அணிந்து பிச்சையெடுக்க துவங்கிஉள்ளனர்.
காலை முதல் இரவு வரை பிச்சை எடுக்கின்றனர். இந்த பணத்தில் தங்களின் குடும்பத்தினருக்கு உணவு பார்சல் வாங்கிச் செல்கின்றனர்.
'சிறார் பிச்சை எடுப்பதே, வருத்தத்துக்குரிய விஷயம். காந்தி வேடமணிந்து பிச்சை எடுப்பதை காண சகிக்க முடியவில்லை' என, பலரும் கூறுகின்றனர்.

