ADDED : மே 15, 2026 03:39 AM

பெங்களூரு: வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள், துாய்மையான எரிசக்தி, இருதரப்பு ஒத்துழைப்பு குறித்து, தென் அமெரிக்க குடியரசு நாடான சிலியின் பிரதிநிதிகளுடன், மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே நேற்று ஆலோசனை நடத்தினார்.
சி லி நாட்டின் வெளியுறவுத் துறை அமைச்சர் பிரான்சிஸ்கோ பெரெஸ் மெக்கென்னா தலைமையிலான உயர்மட்ட குழுவினர் இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளனர். நேற்று இந்தக் குழுவினர், பெங்களூரு விதான் சவுதாவில் மாநில அமைச்சர் பிரியங்க் கார்கே தலைமையிலான கர்நாடக அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
தொழில்நுட்பம், புத்தாக்கம், ஸ்டார்ட்அப் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் கர்நாடகாவுடன் இணைந்து பணியாற்ற சிலி நாட்டு பிரதிநிதிகள் விருப்பம் தெரிவித்தனர்.
பல்வேறு துறைகளில் இணைந்து பணியாற்றுவது குறித்து ஆலோசனை நடத்தியதில், இருதரப்பினரும் ஒரே மனநிலையில் இருப்பது தெரிய வந்ததாக, மாநில அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வளர்ச்சி, திறமைப் பரிமாற்றம், சந்தை அணுகல், பசுமை ஹைட்ரஜன், நிலையான தொழில்துறைப் புத்தாக்கம் உள்ளிட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல், கடல்சார் உயிரித் தொழில்நுட்பம், மீன் வளர்ப்புத் தொழில்நுட்பங்கள் உள்ளிட்ட துறைகளில் பங்களிப்பது குறித்து இருதரப்பினரும் பேச்சு நடத்தி உள்ளனர்.
